அமெரிக்காவில் பிலாடெல்பியா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அண்மையில் தலைதூக்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கி வைத்துக் கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இச்சூழலில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் பிலாடெல்பியா பகுதியில் சனியன்று அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மக்கள் கூட்டம் மிகுதியான இடத்தில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இதனை காவல் துறை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது அதிகாரிகள் பதில் தாக்குதல் மேற்கொண்டனர். இருப்பினும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து சரியா தெரியவில்லை. இந்த தாக்குதலில் அரங்கேறிய இடத்திலிருந்து இரண்டு கைத்துப்பாகிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்த காவல் துறை முடிவு செய்துள்ளது.