லா பாஸ், ஜூலை 13- பிரசவத்திற்குப் பிறகு 90 நாட்கள் விடுப்பை பெண்கள் இப்போது முதல் எடுத்துக் கொள்ளலாம் என்று தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான எலிசபெத் அல்கோன் தெரிவித்துள்ளார். பொலிவியாவின் தொழிற்சங்கங்கள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினர். தற்போது 60 நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறது. ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு இது தரப்படுவதில்லை. இதனால், பிரசவத்திற்குப் பிறகு தரப்படும் விடுமுறைக்கு உத்தரவாதம் வேண்டும் என்றும், அந்த விடுமுறைக் காலத்தை 90 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். உழைக்கும் மகளிர் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரசவத்திற்குப் பிறகான விடுப்பை 90 நாட்களாக அதிகரித்து பொலிவியாவின் ஜனாதிபதி லூயிஸ் அர்ஸ் அறிவித்தார். அதோடு, அந்த விடுமுறை தவறாமல் அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டார். மக்கள் நலனில் இடதுசாரி அரசின் கவனம் முழுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என்பது தாயின் பொறுப்பு மட்டுமல்ல. எனவே இத்தகைய சட்டங்களை இயற்றுவதன் மூலம் அரசும் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது“ என்று குறிப்பிட்டார். இதற்கு முன்பாக 1975 ஆம் ஆண்டுச் சட்டப்படி 45 நாட்கள் விடுப்பு பெண்களுக்கு இருந்தது. அதுவும் கிடைக்காத ஒன்றாகவே இருந்து வந்தது.