பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களோடு பணிகள் நிமித்தம் பழக நேரிட்டது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அடியாழத்தில் உறங்கிக் கொண்டிருப்பது சாதி. நம் முன் உள்ளவர் என்ன சாதி என தோண்டிப் பார்க்கத் துடிக்கும் ஆர்வம். அங்கு பணியாற்றிய காலங்களில் பலருக்கும் ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கேட்க கூசி நின்றார்கள். அப்படியொரு பணி நாகரீகம் அங்கிருந்தது. தன்னார்வ நிறுவனங்களில் ஒரு மனிதனின் திறமைதான் முன்னுக்கு நிற்கும். இந்த பண்பு வளர்ந்து வரும் எல்லா நிறுவனங்களிலும் உள்ளது. எனது பணிக்காலத்தின் பாதி வயதை மேற்கண்ட வளர்ச்சி நிறுவனங்களில்தான் செலவளித்தேன். கடந்த 10 ஆண்டுகால அரசுப் பணியில் எல்லாமே தலைகீழ்தான் அலுவலகத்தில் பணிகள் தொடர்பாக நம்மோடு பணியாற்றுபவர்களிடம் பேச நேரிடுகையில்…… பணிகளை விரைந்து முடித்திட கொஞ்சம் குரல் உயர்த்துகையில் பேசுபவர் உயர் அதிகாரியாக இருந்தாலும் அவர் என்ன சாதி என்ற ஆராய்ச்சி நடத்தப்பட்டு கடைசியில் “அது அவனது சாதி புத்தி” என்று முடிக்கப்படும்.
ஒரு தனி மனிதனின் குணநலன்கள் எப்படி ஒரு சாதியின் குணமாக இருக்க முடியும்? சாதியின் அளவு கோலில் எப்படி ஒரு தனி மனிதனின் பழக்க வழக்கங்களைத் தீர்மானிக்க முடியும்? மேற்கண்ட கேள்விகளுடனேதான் நமது பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பணிகளில் காட்ட வேண்டிய அக்கறையை…. நம்மால் அடுத்தவருக்கு எந்தளவுக்கு உதவி செய்யப் போகிறோம் என்று காட்ட வேண்டிய ஆர்வத்தை, தனி நபரின் செயல்பாடுகளையும், பழக்க வழக்கத்தையும் பழிப்பதில் காட்டுவது எந்த வகையில் நியாயம்?
“வணக்கம் சார்”
”வணக்கம்”
“நீங்க எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க”
“பரீட்சை எழுதித்தானா..?”
“கோட்டாவுலயா?”
“ரெகமெண்டேஷனா?”
“பணம் குடுத்தா”
“ என்ன சார் ஒன்னும் பேசாம இருக்கிங்க…? ஒன்ணுமில்லாமல் எப்படி சார் வேலைக்கு வர முடியும்?”தமிழ்நாட்டில் எந்தத்துறை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தாலும் முதல் நாள் கேட்கப்படும் கேள்விகள் தான் மேற்கண்டவை. இட ஒதுக்கீடு, சிபாரிசு, லஞ்சம் இந்த மூன்றுமில்லாமல் தன் சுய முயற்சி கொண்டு ஒருவர் அரசுப் பணியில் அமர முடியாதா? அப்படியே ஒருவர் தன் முயற்சியில் வேலையில் சேர்ந்தாலும் அவரால் சுயமாக தனது சாதியின் பலமின்றி தனித்து செயல்பட முடியாதா…? பணித்தளங்களில் உருவாகும், உருவாக்கப்படும் நட்பு வட்டம் கூட சாதியின் அடிப்படையில்தான் உருவாகிறது. அரசுத் துறையில் பணியாற்றும் நபர்கள் சாதிகளை தங்களின் வசதிக்காக பல கூறுகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். பொருளாதார அடிப்படையில், உள்ளூர், உள் மாவட்டங்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒத்த நிலையில் இருக்கும் சாதிகள் எல்லாமே தங்கள் எல்லாம் ஒன்று என்று எண்ணுகிறார்கள்.
“அண்ணாச்சி நமக்கு திருநெவேலி பக்கம் அம்பாசமுத்திரம்தான் சொந்த ஊரு. இங்க கோயம்புத்தூருல நீங்க எப்பிடி செல்வாக்கா இருக்கிங்களோ அதே செல்வாக்கு நமக்கும் இருக்கு. நாம ரெண்டு கம்யூனிட்டியும் ஒரே ஈகுவேல் கம்யூனிட்டிதான். பல எடங்கள்ல நம்ம ரெண்டு கம்யூனிட்டியும் சம்மந்தங்கூட பண்ணியிருக்காங்க.“ என்று சொல்லி தனக்கான சாதி அடையாளத்தையும், தகுதியையும் உருவாக்கிக் கொள்ளும் அரசு அலுவலர்கள் அதிகம் உள்ளனர். தான் செய்யும் தவறுகளையும், தனது பணி மீறல்களையும் மறைக்கும் ஓர் பேராயுதமாக சாதியை முன்னிருத்திக் கொள்கிறார்கள். அரசியல் அமைப்புகளில் தனது சாதிக்காரன் பெரிய பதவிகளில் இருந்தால் “மரியாதை நிமித்தம்” சந்தித்து தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். சாதாரண கிராம நிர்வாகத்தில் தொடங்கும் சாதிப் பின்னல், வட்டாரம், மாவட்டம் மாநிலத்தையும் தாண்டி தேசிய அளவில் அரசுப் பணிகளோடு இழுத்துப் பின்னப்பட்டுள்ளது. இந்த பின்னல் தேசிய வளர்ச்சியை நூறாண்டுகளுக்கு பின் நோக்கி இழுத்துச் செல்கிறது.
அரசு நிறுவனங்களுக்குள் சாதி புகுந்து உள்ளதா? சாதி பூசல்களுக்குள் அரசு நிறுவனங்கள் விழுந்து கிடக்கின்றனவா? எளிதில் விடைகாண முடியாமல் நீண்டு செல்லும் இந்த வினாவுக்குள்தான் இந்தியா என்ற மிகப்பெரிய துணைக்கண்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் சுருங்கிக் கிடக்கிறது. சாதிகள் பற்றிய பாகுபாடுகள், எல்லா சாதிகளும் தாங்கள்தான் உயர்ந்த சாதி என்று பறைசாற்ற வைக்கிறது. கிராமங்களில்தான் சாதி பார்த்து பழகுவார்கள்; நகரங்கள் முன்னேறி விட்டன என்ற மாயையை உடைத்து ஹைதரபாத்தில் நிகழ்ந்த சம்பவம் உலகிற்கு எடுத்துச் சொன்னது. கல்வி நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் சாதியத்தின் ஆதிக்கத்தின் கீழ்தான் கட்டுண்டு கிடக்கிறது. அரசாங்கப் பணிகளுக்காக தங்களின் உழைப்பையும் அறிவையும் பயன்படுத்தி அரசுப்பணி கிடைத்து விட்டதே என்ற வெற்றிக்களிப்பால் அலுவலகம் வரும் இளைய தலைமுறையினரை பழமையும் சாதியும் பேசி அவர்களின் ஆர்வத்தை மழுங்கடிக்கும் பணியைச் செய்பவர்கள் யார்?
எந்தத் தகுதியுமின்றி சிபாரிசின் பேரில் அரசுத் துறைக்குள் நுழைந்து கொள்பவர்கள்…. கொடுக்கும் வேலையைச் செய்யாதவர்கள்,… செய்ய முடியாதவர்கள்…. லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள்….. ஊழல் செய்யும் உயர் அதிகாரிகளுக்கு ஊழியம் செய்பவர்கள்…… என்று நீண்டு செல்லும் நாசக் கிருமிகளால் நசுக்கப்படுகிறார்கள் புதிய பணியாளர்கள். அலுவலகத்தில் தபால்களையும், கோப்புகளையும் மறைத்து வைப்பது, களப் பணிகளுக்கு செல்லவிடாமல் தடுப்பது, உயரதிகாரிகள் மூலம் நெருக்கடிகள் கொடுப்பது, விளக்கம் கோரும் குறிப்பாணை கொடுப்பது, அரசாங்கப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள், ஏஜெண்டுகள் மூலம் அச்சுறுத்தல் தருவது, சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இழித்துரைப்பது, ஏளனம் செய்வது போன்ற காரியங்கள் செய்பவர்களே அரசு அலுவலகங்களில் அதிகாரம் பொருந்தியவர்களாக உள்ளார்கள். பணிச் சுதந்திரமும் பாராட்டுகளுமே ஒருவனை சிறந்த நிர்வாகியாக மாற்றும் சக்தி பெற்றது. 2006-க்குப் பிறகான, ஆண்டுகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளின் மூலம் அரசுப் பணியில் சேர்ந்தவண்ணம் உள்ளார்கள்.
தங்களுக்குக் கிடைத்த பல்வேறு வெளிநிறுவன வாய்ப்புகளையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு அரசுத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான் அதிகம்.கல்வி முடிந்த பின்பு தங்களின் வாழ்வாதாரத்திற்காய் சொற்ப ஊதியத்தில் தனியார் நிறுவனங்களில் பணி செய்த காலங்களில் கிடைத்த பாராட்டும், பணிச்சுதந்திரமும் இங்கும் கிடைக்கும் என நம்புகிறவர்களை, முதல்நாளே அவர்களின் ஆர்வத்தின் மீது ஆஸிட் ஊற்றும் பணியைத்தான் அரசாங்கத்தின் பல துறைகளின் பழுத்த பழங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அதிலும், சமுதாயத்தின் பின்தங்கிய, எளிய சாதிகளிலிருந்து பணிகளுக்கு வரும் நபர்களை சாதியைச் சொல்லிச் சொல்லியே சாகடிக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களைத் தொடர்ந்து காப்பாற்றுவதே நமது அரசாங்கங்களின் பணியாகிப் போகிறது.
அரசு அலுவலகங்களில் நிரந்தரப் பணியாளர்கள் தற்காலிகப் பணியாளர்கள் என்ற இரு துருவங்களின் உரசலில் சாதியின் முழு அதிகாரமும் இணைந்து கொள்கிறது. இதில் ஒரு சாரார் நசுக்கப்படுவதும், ஒரு சாரார் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிரந்தரப் பணியாளர்களின் பணி மாறுதல்களிலும் பதவி உயர்வுகளிலும் சாதியம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாவட்ட தலைநகரைத் தாண்டாத பணியாளர்களும், மாநிலம் முழுவதும் பந்தாடப்படும் பணியாளர்களும் வாங்கும் ஊதியம் ஒன்றுதான். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், வட்டார, வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தங்களது பணிக்காலம் முழுவதையும் கழித்துவிட்டு “எல்லைதாண்டாமல்” பதவி உயர்வும் பெற்று, எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லாத பிரிவுகளில் பணியாற்றும் பலரின் உள்முகம் தேடிப்பாருங்கள். அவர் அந்த மாவட்டத்தில் அதிகாரம் செய்யும் சாதிக்காரராகவும், அதிகார மையங்களின் உறவினராகவும் இருப்பார்.
ஆண்டுக்கு இரண்டு முறை மாவட்ட அளவில் சிறப்பாக, பணியாற்றிய பணியாளர்களுக்கு சிறந்த பணியாளர் விருது வழங்கப்படும். இந்த விருதுகளும், அதைப் பெறுபவர்களும் யார் என்பதைப் பொறுத்தே அவர் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை சாதிக்காரர் என்று புரிந்து கொள்ளலாம். எந்தவொரு மனிதனும் பிறக்கும் போதே சாதிக் குணத்தோடு பிறப்பதில்லை. அவனை சாதியாகவும், மதமாகவும் மாற்றுவது சமூகமும், சமூகத்தை வழிநடத்தும் அரசும்தான். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு பரந்துபட்ட சிந்தனைகளை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பயிற்சிகள் தர வேண்டும். அரசு நிறுவனங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. இதில் குறிப்பிட்ட பிரிவினர் ஆதிக்கம் செலுத்துவதை கடுமையான சட்டங்கள் கொண்டு தடுத்திட வேண்டும்.