what-they-told

img

இந்நாள் ஜன. 06 இதற்கு முன்னால்

1912 - கண்டப் பெயர்ச்சி பற்றிய தனது கருத்துகளை முதன்முறையாக ஆல்ப்ரெட் வேகனர் என்ற ஜெர்மானிய ஆய்வாளர், ஃப்ராங்க்ஃபர்ட்டில் வெளியிட்டார். புவியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாக இணைந்திருந்து, பின்னாளில் கண்டங்களாகப் பிரிந்தன என்ற கோட்பாடு கண்டப் பெயர்ச்சி என்றழைக்கப்படுகிறது. முதல் நவீன அட்லசை உருவாக்கியவராகக் குறிப்பிடப்படும் ஆப்ரஹாம் ஆர்ட்டெலியஸ் என்ற நெதர்லாந்துக்காரர், 1596இலேயே இக்கருத்தைக் கூறியிருந்தார். நிலப்படம்(மேப்) வரைபவரான ஆர்ட்டெலியஸ், நிலநடுக்கங்களாலும், வெள்ளங்களாலும் அமெரிக்கக் கண்டங்கள் ஐரோப்பா, ஆஃப்ரிக்கக் கண்டங்களிலிருந்து பிரிந்து சென்றதாகவும், திருகுவெட்டு(ஜிக்சா) புதிர்போல, இந்த நிலப்பரப்புகளை அருகில் கொண்டுவந்து சேர்த்தால், ஒன்றோடொன்று பொருந்தும் என்றும் கருதினார். வேறு சில ஆய்வாளர்களும் இத்தகைய கருத்துகளைக் கூறியிருந்தாலும், புவியியல் வடிவங்கள், பாறைகளின் பண்புகள், படிவுகள்(ஃபாஸில்) உள்ளிட்டவற்றை வேகனர் ஆய்வு செய்து இக்கருத்தைக் கூறினார். ஆனாலும், அப்படி நகர்வதற்கான காரணம் என்ன என்பதை விளக்க முடியாததால் இக்கருத்து 1950கள்வரையுமே ஏற்கப்படவில்லை. துருவ ஆய்வாளராகவும், காலநிலை ஆய்வாளராகவுமிருந்த வேகனர், புவியிலாளர் அல்ல என்பதும் மறுப்பதற்கான காரணமாக இருந்தது! 1950களின் இறுதியில் ஏற்கப்பட்ட, புவியின் மேற்பரப்பு டெக்ட்டானிக் ப்ளேட் என்னும் தகடுகளாலானது எனும் கண்டத்தட்டு இயக்கவியல் கொள்கை, கண்டப் பெயர்ச்சியை மறுக்க முடியாததாக்கியது. அண்டார்ட்டிக்காவில் கிடைத்த நன்னீர் உயிரியின் படிவு உட்பட, புவியின் பல பகுதிகளிலும் காணக்கிடைத்துள்ள, அப்பகுதியின் தற்போதைய சூழ்நிலைகளுக்குப் பொருந்தாத விலங்கு, தாவரப் படிவுகள், நிலப்பரப்புகள் ஒன்றாக இணைந்திருந்தன என்பதை நிரூபித்தன. புவியின் மேல் ஓட்டின் மென்பாறைக்கோளத்தின்மீது மிதந்துகொண்டிருக்கும் அடிக்கற்கோளம் என்பது, கண்டத்தட்டுகள், கடலடித் தட்டுகள் என்னும் தட்டுகளாக இருப்பதும், இவை புவியின் உட்புற வெப்பநிலை, ஈர்ப்புவிசை, தட்டுகளின் எடை உள்ளிட்டவற்றின் மாறுபாடுகளால், கிட்டத்தட்ட மனிதனின் நகம் வளரும் வேகத்தில் நகர்ந்துகொண்டே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோடி ஆண்டுகளுக்குமுன் ஒன்றாக இருந்த புவியின் அனைத்துக் கண்டங்களும், இந்த வேகத்தில் நகர்ந்தால், அடுத்த சில கோடி ஆண்டுகளில் இன்றைக்கு இருப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட வடிவத்திற்கு மாறிவிடும். நிலநடுக்கங்களை ஆய்வு செய்து, இந்தத் தட்டுகளின் எல்லைகளையும் கணித்திருக்கிற ஆய்வாளர்கள், தட்டுகளின் நகர்வால், அத்தகைய எல்லைப் பகுதிகளில்தான் அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுவதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

;