what-they-told

இந்நாள் ஜன. 01 இதற்கு முன்னால்

கி.மு. 153 - ஆண்டின் தொடக்கமாக ஜனவரி 1, முதன்முறையாக ரோமானிய கான்சல்களால் கடைப்பிடிக்கப்பட்டது. கி.மு.509இலிருந்து கி.மு.27வரை நீடித்த ரோமக் குடியரசில், ஆண்டுதோறும் இரு கான்சல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உச்ச அதிகாரம் பெற்றவர்களாகச் செயல்படுவார்கள். அவர்கள் பதவியேற்கும் நாளிலிருந்து ஆண்டு தொடங்குவதாகக் கணக்கிடப்பட்டு, அந்த இருவரின் பெயராலேயே ஆண்டு குறிப்பிடப்படும். தொடக்கத்தில் வேறு தேதிகளில் தொடங்கிய இந்த முறை, கி.மு.153க்குப்பின் ஜனவரி 1இல் தொடங்கி, டிசம்பர் 29இல் முடிவதாக மாறியது. அக்காலத்திய டிசம்பருக்கு 29 நாட்கள்தான்! மாதத்தின் முதல்நாள் காலெண்ட்ஸ் என்று குறிப்பிடப்பட்டதிலிருந்து, ஜனவரி காலென்ட்ஸ் என்பது, ஆண்டின் முதல் நாளாகியது. காலெண்டே என்ற லத்தீன் சொல்லிலிருந்தே காலெண்ட்ஸ் என்பதும், தற்போதைய ஆங்கிலச் சொல்லான காலெண்டர் என்பதும் உருவாயின. தொடக்கம், நேரம், (சொர்க்கத்தின்)வாசல் முதலானவற்றிற்கான ரோமானிய (ஆண்)கடவுளான ஜானஸ் என்பதிலிருந்தே ஜனவரி என்ற பெயர் உருவானதாக பொதுவாக குறிப்பிடப்பட்டாலும், ரோமானிய உழவர்களின் பஞ்சாங்கத்தில், பெண் கடவுளான ஜூனோ, ஜனவரிக்கான காவல் தெய்வமாகக் குறிப்பிடப்படுகிறார். கி.மு.222இலிருந்து கி.மு.154வரை ஆண்டின் முதல்நாளாக(கான்சல்கள் பதவியேற்கும் நாளாக) இருந்த மார்ச் 15 என்பதையே சமய நிகழ்வுகளும், தனியாரும் ஆண்டுத் தொடக்கமாகக் கடைப்பிடித்தாலும், கி.மு.46இல் ஜூலியஸ் சீசர், ஜூலியன் நாட்காட்டியைச் சட்டமாக்கியதும், அதுவும் மாறிவிட்டது. கத்தோலிக்க திருச்சபை அதிகாரம் பெற்றிருந்த இடைக்காலத்தில், ஐரோப்பாவின் பல நாடுகளும் கிறித்து பிறப்பு(டிசம்பர் 25), கிறித்து பிறப்பின் முன்னறிவிப்பு(மார்ச் 25), மார்ச் 1, ஈஸ்ட்டர் உள்ளிட்ட நாட்களை ஆண்டின் தொடக்கமாகக் கடைப்பிடித்தன. பைசாந்தியப் பேரரசில் செப்டம்பர் 1 ஆண்டுத் தொடக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. ஜனவரி 1ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கடைப்பிடித்துவந்த இங்கிலாந்தும், 1155இல் முன்னறிவிப்புநாளை(மார்ச் 25) ஆண்டின் முதல் நாளாகக் கடைப்பிடிக்கத்தொடங்கி, 1752இல் கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறும்வரை அதையே கடைப்பிடித்தது. அதனாலேயே இங்கிலாந்திலும், அதன்கீழிருந்த நாடுகளிலும் நிதியாண்டு ஏப்ரலில் தொடங்குவது இத்தொடரில் 2018 செப்டம்பர் 3இல் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய வணிகத் தொடர்புகளுக்கு பொதுவான காலக்கணக்கீடு அவசியமானதால், பெரும்பாலான நாடுகளால் கிரிகோரியன் நாட்காட்டி ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி 1 ஆண்டின் முதல் நாளானதுடன், உலகில் மிக அதிகமாகக் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாகவும் விளங்குகிறது!