what-they-told

img

தோல்வியே நமக்கான வெற்றி... - ஐ.வி.நாகராஜன்

நம்பிக்கை

பத்தாவது முறையாக கீழே விழுந்தவனை பார்த்து பூமி முத்தமிட்டு சொன்னது நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று. உண்மைதான். விழுவதெல்லாம் எழுவதற்குதானே தவிர அழுவதற்கு அல்ல. இதுதான் தோல்விகள் நமக்கு சொல்லும் பாடம். “மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து” தடைபடும் இடங்களில் தளராது வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப்போல விடாமுயற்சி உடையவனுக்கு வரும் துன்பமே துன்பப்பட்டு விலகிபோகும். எருதினைப் போன்ற முயற்சியுடைவர்கள் தோல்விக்கே தோல்விதந்து விடுவார்கள் என்பதுதான் இந்த குறளின் விளக்கம். நமது முயற்சிகளுக்கு தோல்விகள் எப்போதும் தடைப்போடக்கூடாது. முன்னணிக்கு வந்தவர்களின் பின்னணிகள் எல்லாம் தோல்வியால் சூழப்பட்டுள்ளது என்பதுதான் வரலாறு. தோல்விகள் இல்லாத வெற்றி எவருக்கும் சாத்தியமில்லை. வாழ்க்கை என்பது திரைப்படம் அல்ல. ஒரே பாடலில் முன்னேறி விடுவதற்கு. நிழலுக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு உண்டு. திரைப்படம் என்பது நிழல். வாழ்க்கை என்பது நிஜம்.  ஒருவர் தோல்வியே அடைந்ததில்லை என்றால் அவர் புதிதாய் எதையும் முயற்சி செய்யாதவர் என்று அர்த்தம்.

நாம் நடக்கும் பாதை மலர்மீது அமையவேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. ஆனால் அதில் உள்ள ஒரு முள்ளைக்கூட மிதிக்கக்கூடாது என்று நினைப்பதுதான் தவறு. வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இருப்பதில்லை. தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவே ஒரு வெற்றிதான் என்பதை உணரவேண்டும். மனவியல் அறிஞர் யங் தோல்விகள் என்பதை அடையாளங்கள், முன்னோடிகள் என்று குறிப்பிடுகிறார். தோல்வி என்பது நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதை தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலிதனமாக புரிந்து கொண்டு வேறு பாதையை ஆராய வேண்டும். வெற்றியைவிட தோல்விக்கு பலம் அதிகம். ஏனெனில் வெற்றி சிரித்து மகிழவைக்கும். ஆனால் தோல்வியோ சிந்தித்து வாழவைக்கும். பெரும்பாலானோருக்கு வாழ்க்கையில் திருப்புமுனை என்பது தோல்வியின் வடிவில்தான் வந்திருக்கிறது. அவற்றை நமது மன உறுதிக்கு வைக்கப்பட்ட சோதனையாக கருதவேண்டும். அப்போது தோல்விகளால் நமக்கு எதிர்காலத்திற்கு பயன் உண்டு என்பதை உணர முடியும்.  நேற்றைய தோல்விகளிலிருந்து இன்றைய முன்னேற்றத்திற்கான பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வி எனும் நேற்று மடிந்த வைக்கோல்; இன்று நல்ல எருவாகி இருக்கிறது என்பதை உணர்ந்தால் வெற்றி வெகுதூரத்தில் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு துன்பமும் ஒவ்வொரு தோல்வியும் தம்மோடு அதற்கு சமமான அல்லது அதைவிட பெரிய பயனுக்கான விதையை சுமந்தே வருகின்றன என்று மாவீரன் நெப்போலியன் சொல்வார். பொருள் சார்ந்த தோல்விகள் நம்முடைய முன்னுரிமைகளை மதிப்பீடு செய்யவும், எது நமக்கு முக்கியம் என்பதை தீர்மானித்துக்கொள்ளவும், நமக்கென்று புதிய குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொள்ளவும் வழி செய்யும். உறவுகளுக்குள் ஏற்பட்ட தோல்விகள் நம்முடைய பண்புகளை பரிசோதிக்க நம்மை நிர்ப்பந்திக்கும். அடுத்தவர்களை கையாள்வதில் உள்ள சமயோசிதங்களை நமக்கு போதிக்கும். அச்சம் கவலைகள் போன்றவற்றால் நம் மனதுக்குள்ளேயே ஏற்படும் தோல்விகளுக்கு நாம் சுய பரிசோதனை செய்ய ஆரம்பிப்போம். ஆறுதல்பெற வழிதேடுவோம். அந்ததேடலில் உள்ளார்ந்த அமைதியை காண்போம்.  

ராபர்ட்புருஸ் என்ற மன்னன் போரில் பல முறை தோல்வியுற்று குகையில் ஒளிந்து கொண்டிருந்தபோது, வலைபின்னிய சிலந்தியை பார்த்து சிந்தித்தான். சிலந்தி பின்னிய வலை அறுந்து அறுந்து விழுந்தாலும் விடாமுயற்சியுடன் அது வலை பின்னியதை பார்த்து அவனுக்கு தன்னம்பிக்கை பிறந்ததது. அதுவே பின்னாளில் அவனை வெற்றியாளனாக்கியது. அறிவியல் மேதை ஜன்ஸ்டீன் பாலிடெக்னிக் நுழைவுதேர்வில் தோற்றவர். கணித மேதை ராமானுஜம் மூன்று முறை இன்டர்மீடியட் தேர்வில் தோற்று பிறகு கணிதத்துறையில் சாதனைகள் புறிந்தவர். மாபெரும் கவிஞர் ஷெல்லி பல்கலைக்கழத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டவர். ஆபிரகான் லிங்கன் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி, நகராட்சி தேர்தலில் தோல்வி, மாமன்ற தேர்தலில் தோல்வி, கமிஷனர் தேர்தலில் தோல்வி, செனட்டில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று பல தோல்விகளுக்கு பிறகே வெள்ளை மாளிகை அதிபராக உயர்ந்தார். பொருளாதார நுணுக்கங்களை அடைந்த பிறகுதான். கார்ட்டூனிஸ்ட் வால்டிஸ்னி உலகபுகழ்பெற்ற நிறுவனத்தை தொடங்கினார். மருத்துவ ஆராய்ச்சியில் தோல்வியடைந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகுதான் அலெக்ஸாண்டர் பிளமிங் பென்சிலின் மருந்தை கண்டுப்பிடித்தார். பலமுறை தோல்விகண்ட பிறகுதான் ஹென்றிபோர்டு சிறப்பான மோட்டார் காரை கண்டுபிடித்தார். இப்படி வானொலியை கண்டுபிடித்த மார்கோனி, மின்சார விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோரும் முதன் முதலில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். 100 சதம் அடித்த சச்சின்டெண்டுல்கர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்தான். இவர்கள் அனைவருமே தோல்விகளிடம் முகவரிகேட்டு சென்றுதான் வெற்றியின் வாசலை அடைந்தார்கள். விதைகள் தாம் விழும் போதெல்லாம் மரமாக எழுவோம் எனும்போதும், இலைகள்தாம் விழுந்தாலும் உரமாவோம் எனும் போதும், நாம் மட்டும் விழுவதற்கு தயங்கலாமா? விழுவதும் எழுவதும்   வாழ்வதற்காகதான் என்பதை புரிந்து கொண்டால் வெற்றி நம் பக்கம்.

அறிவிப்பு

‘ஆங்கிலம் கற்பது எளிதே’ பகுதி அடுத்த வாரத்திலிருந்து இடம்பெறும்.
 

;