tamilnadu

img

ஆக்சிஜன் கிடைக்கவில்லை; உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..!

ஹைதராபாத்:
ஹைதரபாத்தில் 34 வயது இளைஞர் ரவிக்குமார் தான் உயிரிழப்பதற்கு முன்பு அரசு மருத்துவனையிலிருந்து, தனது தந்தைக்கு அனுப்பியுள்ள வீடியோ தகவலால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

உயிரிழந்த இளைஞரின் தந்தை கூறும்போது, தனது மகனுக்கு பத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, இறுதியாக ஹைதராபாத்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக தெரிவித்துள்ளார். 
சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், “என்னால் மூச்சு விட முடியவில்லை. நான் கெஞ்சிக் கேட்டும் கடந்த மூன்று மணி நேரமாக எனக்கு ஆக்சிஜன் வழங்கவில்லை. அப்பா, என்னால் மூச்சு விட முடியவில்லை, என் இதயம் நின்றது போல் இருக்கிறது.விடைபெறுகிறேன் அப்பா. அனைவரிட மிருந்தும் விடைபெறுகிறேன் அப்பா,” என்று ரவிக்குமார்  உடைந்த குரலில்தெரிவித்துள்ளார். 

‘எனது மகன் உதவிக்காக அழைத்துள் ளான், எனினும் யாரும் அவனுக்கு உதவவில்லை. அவனது இறுதி சடங்குகளை முடித்து வீடு திரும்பிய பின்னர் தான் இந்த வீடியோவைப் பார்க்கிறேன். எனது மகன் விடைபெறுகிறேன் அப்பா என்று கூறுகிறான். எனது மகனுக்கு நடந்தது, யாருக்கும் நேரக்கூடாது. எதற்காக எனது மகனுக்கு ஏன் ஆக்சிஜன் மறுக்கப்பட்டது? அவசரமாக தேவைப்படுகிறது என்று சொன்னால், அவர்களிடம் இருந்து ஆக்சிஜனை எடுத்துச்சென்றுவிடுவார்களா? எனது மகனின் வீடியோப் பதிவை பார்த்து எனது இதயம் நொறுங்கியது.’ எனக் கதறுகிறார் அந்தத் தந்தை.இதனிடையே, இளைஞரின் தந்தை கூறும் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து நிர்வாகத் தரப்பில்கூறுகையில், “அந்த நோயாளி மயோர்கார்டிடி ஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவே அவரது திடீர் மரணத்திற்குக் காரணம். “நோயாளிக்கு இதய நோய் இருந்தது. நாங்கள் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுத்தோம். இதயப் பிரச்சனை அவரது திடீர் மரணத்திற்கு காரணம்” என்று கூறப்பட்டுள்ளது.

அந்த இளைஞரின் இறுதிச்சடங்குகளை அவர் உயிரழந்த அன்றைய தினமே குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, மறுநாள் காலையில், அவரது தந்தைக்கு தனியார்மருத்துவனையில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அங்கு அவரது மகன் கொரோனா வைரஸ்தொற்றால் தான் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து, அந்த குடும்பத்தினருக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞரின் பெற்றோர், மனைவி, சகோதரர், மைத்துனர் என அனைவரும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தற்போது கவலையில் உள்ளனர்.

;