செங்கொடித் தோழர்கள் பிரச்சாரத்தால் கலங்கி நிற்கும் எதிர் முகம்!
கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் நடந்த மக்களவைத் தேர்தலின் போது, வேலூர் மாவட்டத்தில் பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாக கூறி வேலூர் தொகுதி தேர்தலை கடைசி நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, வாக்குப்பதிவு நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதி களை கைப்பற்றி சரித்திரம் படைத்தது. ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த சூழ்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் டி.எம். கதிர் ஆனந்த் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக அணியில் ஏ.சி. சண்முகம் வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கிறார். மக்கள் நீதி மையம், அமமுக போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொண்டது
மார்க்சிஸ்ட் கட்சியின் 200 குழுக்கள்
பிரச்சாரக் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. இம்முறை 23 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் நேரடி போட்டியாகும். மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் இந்த முடிவை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான கதிர் ஆனந்தின் வெற்றிக்கு மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரும் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளருமான எஸ். தயாநிதி தலைமையில் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தொகுதி வாரியாகவும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏ. நாராயணன், நாகேந்திரன். அணைக்கட்டுக்கு என். காசிநாதன், பி.எஸ். மகாலிங்கம். கே.வி.குப்பம் தொகுதிக்கு சாமிநாதன், சீனிவாசன், குடியாத்தம் தொகுதியில் பி.காத்தவராயன், பி. குணசேகரன். ஆம்பூருக்கு பி.சக்திவேல், வி.அருள் சீனிவாசன், வாணியம்பாடி தொகுதிக்கு என்.பி. இராமச்சந்திரன், ஏ.எம். இந்துமதி ஆகியோர் தலைமையில் பிரச்சாரக் குழுக்கள் தேர்தல் களத்தில் தொகுதி முழுவதும் பணியாற்றி வருகின்றன.
வீடுவீடாக....
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் ஏன் வாக்குகள் அளிக்க வேண்டும் என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் தொகுதி முழுக்க லட்சக்கணக்கில் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி வீடுவீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரியும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். கிராமங்கள் தோறும் வாகனப் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் எனப் பல்வேறு வடிவங்களிலும் செங்கொடித் தோழர்கள் பம்பரமாய் சுழன்று வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நகரப் பகுதிகளிலும் வீதிவீதியாகவும் மக்கள் அதிகம் கூடும் பஜார், பேருந்து நிலையம் என முக்கிய பகுதிகளிலும் தினசரி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.
கலைக்குழுக்கள்
வேலூர் மக்களவை தொகுதி பிரச்சாரக் களத்தில் சுரேந்திரன் தலைமையிலான கலைக்குழுக்கள், கிராமிய மணம் கமழும் இசைப் பாடல்கள், நாடகங்களுடன் தங்கள் பங்கிற்கு கிராமங்கள் மட்டுமின்றி நகரின் மையப் பகுதிகளிலும் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைபெற்றிருக்கிறது. ஏகலைவன் தலைமையிலான குழுவினர் சமூக வலைதளங்களி லும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
உற்சாகத்தில் தோழர்கள்
வேலூர் நகரம் பஜார் பகுதியில் நடந்த தெருமுனைக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ். தயாநிதியுடன் உரையாடிய போது, “வேலூர் மக்களவை தொகுதி பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் சுறுசுறுப்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்ட பிரச்சார பொதுக் கூட்டம் எங்கள் அணிகளுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங்கும் பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். இதுமட்டுமன்றி கட்சியின் மாவட்டத் தலைவர்கள் தொகுதி முழுவதும் உள்ளூர் திமுக நிர்வாகிகளோடு இணைந்து பொதுக்கூட்டம் நடத்துவது, வீதிவீதியாக, கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து வாக்குகள் கோருவது அணிக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது” என்றார்.
திக்குமுக்காடும் எதிர் அணி
மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளரும் வேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான ஏ. நாராயணன் கூறுகையில், “வேலூர் மாவட்டம் பல்வேறு பெருமைகளை கொண்டதாக இருந்தாலும் செங்கொடிக்கு என்று தனி பாரம்பரியம் உண்டு. தொகுதி முழுக்க நடந்துவரும் பிரச்சாரத்தில் செங்கொடி இயக்கத் தோழர்கள் அணி அணியாய் பங்கேற்று வருகிறார்கள். இந்த மக்களவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளார்கள். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. சங்கரி தலைமையில் மாதர் இயக்கத்தினரும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவது எதிரணியில் உள்ளவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது”என்றார். ஏராளமான தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான ஆம்பூர், வாணி யம்பாடி பகுதிகளில் தொழிற்சங்கத்தினரும் விவசாயத் தொழிலாளர்களும் விவசாயிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றிருப்பது திமுகவின் வெற்றிக்கு அடித்தளம் என்கின்றார்கள் பிரச்சாரக் குழுத் தலைவர்கள் ராமச்சந்திரன், சக்திவேல், அருள் சீனிவாசன், இந்துமதி ஆகியோர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளில் ஒன்றான குடியாத்தம் பகுதியில் பீடி, தீப்பெட்டி தொழிலாளர்களுடன் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறார்கள்.
இந்த தேர்தல் களத்தில், வேலூர் நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிஎம்சி அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்; சத்துவாச்சாரி-கொணவட்டம், நேஷனல்-ஆபிசர் லைனில் மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும்; பெண்களுக் கென்று தனியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாக்கித் தர வேண்டும்; வேலூரில் பாரம்பரியமிக்க அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனையை புனரமைத்து தரம் உயர்த்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்; காங்கேயநல்லூர் - சத்துவாச்சாரி சேண்பாக்கம், டி.கே. புரத்தில் தரைப்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும்; ராணுவ வீரர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்க வேண்டும்; குடியாத்தத்தில் நிலவும் போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச் சாலை அமைப்பதுடன், தென்னை விவ சாயிகளின் நலனைப் பாதுகாக்க நார் உபபொருள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும்; பல ஆண்டுகளாய் கிடப்பிலுள்ள பத்தரபல்லி அணைத்திட்டத்தை முடித்து செயல்பாட்டிற்குகொண்டு வர வேண்டும் என ஏராளமான மக்கள் நலத்திட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் செங்கொடி தோழர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அதிமுக அணி திணறி வருகிறது.