tamilnadu

img

பெட்ரோலிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தனியார்மயத்திற்கு எதிர்ப்பு 

சென்னை,நவ.28 பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலி யம் நிறுவனங்கள் (பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல்) தனியாருக்கு விற்பதை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தம் வியாழனன்று (நவ.28) நடைபெற்றது.  தொடர்ந்து லாபத்தில் இயங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் தவறான முடிவை கைவிடக் கோரி கும்மிடிப்பூண்டியில் உள்ள பாரத் பெட்ரோலியம் தொழிற்சாலை  முன்பு  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சொத்து 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உள்ள நிலையில், அதனை ரிலையன்ஸ் மற்றும் அம்பானி குழுமத்திற்கு வெறும் ரூ.63 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறு வனத்தை தனியாருக்கு அரசு விற்கக்கூடாது என்று வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வேலைநிறுத்தம் காரணமாக  இந்த நிறுவனத்தில் 40 ஆயிரம் சிலிண்டர் எரிவாயு நிரப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்  கே.அர்ச்சுனன் தலைமை தாங்கினார்.  இதில்  சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.விஜயன், சங்க நிர்வாகிகள் சி.சண்முகம், பாலகிருஷ்ணன், செல்வகுமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.  நூறு சதவீத தொழிலாளர்கள் பங்கேற்பு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் போக்கை கண்டித்து தமிழ் நாட்டில் உள்ள கும்மிடிப்பூண்டி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஆகிய நான்கு இடங்களிலும் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் என ஒட்டுமொத்த தொழிலாளர்களும் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக நூறு சதவீதம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏறக்குறைய 1.50லட்சம் சிலிண்டர்கள் எரிவாயு  நிரப்பும் பணி நிறுத்தப்பட்டது என தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில பொதுச்செயலாளர் கே.விஜயன் தெரிவித்தார்.