tamilnadu

img

ஜனவரி 9 வேலைநிறுத்தம் ஸ்தம்பித்தது பிரான்ஸ்

பாரீஸ், ஜன. 10- முதலாளி வர்க்கம் இனி நிம்மதி யாகத் தூங்க முடியாது என உரத்து பெரும் குரல் எழுப்ப துவங்கி யிருக்கிறது உலகப் பாட்டாளி வர்க்கம். இந்தியாவில் ஜனவரி 8 அன்று 25 கோடி தொழிலாளர்கள் நடத்திய உலகின் மிகப் பிரம்மாண்டமான வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் தொழிலாளர் வர்க்கம் ஜனவரி 9 வியாழனன்று லட்சக்கணக்கான மக்கள் அணிவகுத்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. அதன் மூலம், வலதுசாரி பாதையில் மிக வேகமாக செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரானின் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் தொழிலாளர்களும், இளைஞர்களும் அணிவகுத்த பிரான்ஸ் தொழிலாளர் வர்க்கத்தின் வேலைநிறுத்தத்தில், பாரீஸ் நகரில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இப்போராட்டத்தை ஒடுக்க வழக்கம்போலவே மக்ரான் அரசு அடக்குமுறையை ஏவியது.

பிரான்சில் மக்ரான் அரசு, ஏற்கெனவே தொழிலாளர்கள் பெற்றிருந்த சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக வெட்டிக் குறைத்துள்ளது. இந்நிலையில் ஓய்வூதியத்தில் மேலும் மேலும் கடுமையான வெட்டினை ஏற்படுத்த முயற்சித்த மக்ரான் அரசை எதிர்த்து கடந்த டிசம்பர் 5ம்தேதி துவங்கி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிரான்சின் அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர்களும் - ரயில் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்து - அவர்களுடன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், ஏர்பிரான்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் டிசம்பர் 5 முதல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது, 1968 மே - ஜுன் மாதத்தில் பிரான்சில் நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்ஸ் தொழிலாளர் வர்க்கம் நடத்தி வருகிற மாபெரும் தொடர் வேலைநிறுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2020 புத்தாண்டில் பென்சன் குறைப்பு தொடர்பான உத்தரவுகளை ஜனாதிபதி மக்ரான், தனது புத்தாண்டு உரையில் திரும்பப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் புத்தாண்டு உரையில் வெறுமனே வாழ்த்துக்களை மட்டுமே தெரிவித்த அவர், அதற்குப் பின்னர், ஓய்வூதியத்தில் மேலும் கடுமையான வெட்டு இருக்கும் என அறிவித்தார். இது பிரான்ஸ் முழுவதும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் உடனடியாக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. இதைத் தொடர்ந்து பிரான்சின் அனைத்து தொழிற்சங்கங்களும் விடுத்த அழைப்பின் பேரில் ஜனவரி 9 அன்று மாபெரும் வேலைநிறுத்தம் நடந்திருக்கிறது.

;