tamilnadu

img

இந்நாள் செப். 16 இதற்கு முன்னால்

1961 - ஹரிக்கேன் எஸ்தர் என்று பெயரிடப்பட்ட சூறாவளியின் மையப்பகுதியில்(கண்), 80 உருளைகள் அளவு சில்வர் அயோடைடை அமெரிக்க கடற்படை விமானம் கொட்டி, சூறாவளியின் வேகத்தைக்குறைக்க முயற்சித்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் சூறாவளிகள் ஏராளமான அழிவுகளை ஏற்படுத்தும். நாம், ஆடி மாதத்தைக் காற்றுக் காலம் என்று அழைப்பதைப்போல, அவர்கள் ஆண்டின் சில பகுதிகளை ஹரிக்கேன் காலம், டைஃபூன் காலம் என்றழைப்பதுடன், அந்த ஹரிக்கேன் காலத்தின் எத்தனையாவது ஹரிக்கேன் என்று குறிப்பிடுமளவுக்கு பல சூறாவளிகள் ஒவ்வொரு காலத்திலும்(சீசன்) ஏற்பட்டு, அழிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்தச் சூறாவளிகள் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களை அறிவிக்க, தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் என்ற அமைப்பினை 1807இலேயே அமெரிக்கா தொடங்கிவிட்டது. ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பணியாற்றிய வின்செண்ட் ஷாஃபர், இர்விங் லாங்முர் ஆகியோர்,

1946இல் மேகவிதைப்பின் சாத்தியத்தை நிரூபித்ததைத் தொடர்ந்து, அதனை ஹரிக்கேன்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வுகள் தொடங்கின. சூறாவளியின் கண்ணில் சில்வர் அயோடைடை தூவுவதன்மூலம், மற்றொரு பெரிய சூறாவளி உருவாகி, முந்தையதை வலுவிழக்கச்செய்யும் என்று நம்பப்பட்டது. 1947இல் ப்ராஜெக்ட் சிர்ரஸ் என்ற பெயரில், 82 கிலோ தூளாக்கப்பட்ட உலர் பனிக்கட்டித் துகள்கள் ஒரு சூறாவளியில், விமானம் மூலம் தூவப்பட்டன. எதிர்பாராதவிதமாக அந்தச் சூறாவளி திசைதிரும்பி, ஜார்ஜியாவில் கரையைக்கடந்து இழப்புகளை ஏற்படுத்திவிட்டது. ப்ராஜெக்ட் சிர்ரசுக்கு எதிராக அம்மக்கள் வழக்குகள் தொடர, 1906இல் இதுபோன்று இயற்கையாக திசைதிரும்பிய சூறாவளியைச் சுட்டிக்காட்டி வழக்குகள் முடிக்கப்பட்டாலும், அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப்பின், 1961 செப்டம்பர் 16இல் முயற்சிக்கப்பட்ட விதைப்பில், சூறாவளியின் வேகம் 10 சதவீதம் அளவுக்குக் குறைந்தது இந்த ஆய்வின் வெற்றியாகப் பார்க்கப்பட்டு, 1962இல் ப்ராஜெக்ட் ஸ்டா(ர்)ம்ஃப்யூரி என்பது தொடங்கப்பட்டது. அது ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டாலும், மேக விதைப்பின்மூலம் சூறாவளியின் வேகத்தைக் குறைக்கலாம் என்று நிரூபிக்க முடியவில்லை. சூறாவளியை பிற நாடுகளின்மீது தாக்குதல் நடத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தவே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இவற்றைத் தொடர்ந்து சூறாவளிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தோல்வியுடன், ப்ராஜெக்ட் ஸ்டா(ர்)ம்ஃப்யூரி 1983இல் கைவிடப்பட்டது.

அறிவுக்கடல்