tamilnadu

விழுப்புரத்தில் பெண் பாலியல் வல்லுறவு-கொலை

விழுப்புரம்.ஜன.17- விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்பு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பல வீடுகள் பாழடைந்து, இடிந்து பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. பாழடைந்த ஒரு வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், நிர்வாண நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது முகம் அடையாளம் தெரியாமல் இருக்க  சிதைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இது பற்றி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பறினர்.  அருகில் ரத்தக்கறை படிந்த செங்கல் கிடந்தது. இறந்து கிடந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண்ணை மர்மநபர்கள், அழைத்து வந்து பாலியல் வல்லுறவு செய்து அவரது தலை மற்றும் முகத்தில் செங்கல்லால் கொடூரமாக தாக்கி, கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது. 

இந்த கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது இளம் பெண்ணின் உடல் மற்றும் பாழடைந்த வீட்டை மோப்பமிட்டு விட்டு வடக்கு ரயில்வே குடியிருப்பு வரை ஓடியது. மீண்டும் அந்த நாய், பாழடைந்த வீட்டிற்கு ஓடி வந்து விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து, அந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூர கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாழடைந்த வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள வீடுகள் மற்றும் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் மர்ம நபர்களின் உருவம் ஏதும் பதிவாகியிருக்கிறதா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.  இந்த பகுதியில் உள்ள பாழடைந்த ரயில்வே வீடுகளில் பல்வேறு சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தும் ரயில்வே நிர்வாகம் அந்த பாழடைந்த வீடுகளை இடித்து தள்ள நடவடிக்கை எடுக்க வில்லை. காவல் துறையினர் இப்பகுதியில் இரவு ரோந்து செல்வது குறைவு. அதனாலேயே இது போன்ற விரும்பத்தகாத சமூக விரோத செயல்கள் நடக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனிமேலாவது நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் பாழடைந்து சமூக விரோத செயல்களுக்கு பயன்பட்டு வரும் வீடுகளை இடிக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

;