tamilnadu

விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, தூத்துக்குடி முக்கிய செய்திகள்

திருவண்ணாமலை ஐ.டி.ஐ-யில் குறுகிய காலப் பயிற்சி
திருவண்ணாமலை, ஜன.6- திருவண்ணாமலை, அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சியில் சேர வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்லூரி முதல்வர் தயாளன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- திருவண்ணாமலை, அரசு ஐ.டி.ஐ.,யில், வேலை வாய்ப்பற்ற இளைஞர் மற்றும் உயர்கல்வி தொடர இயலாமல், பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்திய மாணவர்க ளுக்கு குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. அதன்படி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்த்தல், மோட்டார் காயில் கட்டுதல் போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், சேர விரும்புவோர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு, 14க்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பு, 3 மாதங்கள் நடத்தப்படும். போக்குவரத்து கட்டணம் நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் வழங்கப்படும். இதில், சேர விருப்பமுள்ள மாணவர்கள் வரும், 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 04175 - 233018 என்ற, தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் 2 பேர் பலி
மயிலம்,ஜன.6- விழுப்புரம் அருகே உள்ள சென்னகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (36). இவர் விழுப்புரத்தில் உள்ள ஜவுளிக் கடையில் வேலைபார்த்து வந்தார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வேலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (39). இவர்கள் இருவரும் நண்பர்கள்.  இவர்கள் இருவரும் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். செண்டூரில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் திரும்பினர். அப்போது சென்னையில் இருந்து திருச்சிநோக்கி வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மகேந்திரன், சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த மயிலம் காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் 
திருவண்ணாமலை, ஜன.6- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்களன்று (ஜன.6) பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலகத்தின் சார்பில் 2 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு காதொலி கருவி ரூ.1600 மதிப்பிலும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு, இயற்கை மரணம் உதவித்தொகை காசோலை 1 மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.17 ஆயிரம் என மொத்தம் 3 நபர்களுக்கு ரூ.18,600 மதிப்பிலான நலத்திட்ட உதவியை மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி வழங்கினார்.

எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி மதுரை காவல் ஆணையரிடம் புகார்
மதுரை, ஜன,6- இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டும் விதமாகவும், மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்துள்ள பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேம்பஸ்ஃப்ரண்ட்ஆப் இந்தியாவின் மதுரை மாவட்டத் தலைவர் இப்ராஹிம் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.  புகாரில், “சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக கட்சி யினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எச்.ராஜா, ஏதோ பள்ளிக்கூட காலேஜ் கேம்பஸ்குள்ள இருந்துகிட்டு கல்லெறியலாம்னு நினைக்காத, எப்படி காம்பவுண்டுக்கு வெளியே கல்லு வருதோ அதே மாரி வெளியில இருந்து குண்டு உள்ளே போகும்” எனப் பேசியுள்ளார். இவரது துவேச பேச்சு உள்நோக்கத்துடன் நாட்டின் பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

 ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுவன் மீட்பு
தூத்துக்குடி, ஜன.6- கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித் திரிந்த சிறுவன் ரயில்வே பாதுகாப்புப் படைபோலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் யாருடைய ஆதரவுமின்றி சாமுவேல் என்ற 8வயது சிறுவன் சுற்றித் திருந்துள்ளான். இதையறிந்து ரயில் நிலையத்தில் பணியில்இருந்த சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் ராணி,சோனமுத்து ஆகியோர் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் அந்த சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனிடம், பெற்றோர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவன்? என்ற விபரம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.