tamilnadu

img

போலீஸ் பாதுகாப்புடன் தைலாபுரத்திற்கு ‘சூட்கேஸ்’: வேல்முருகன்

உளுந்தூர்பேட்டை, ஏப். 8-

விழுப்புரம் மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் துரை.ரவிக்குமாருக்கு ஆதரவு கேட்டு உளுந்தூர்பேட்டையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற உரையாற்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வேல்முருகன்,“இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அடிமை கும்பல் என்றும் ஜீரோவுக்கு கீழே மதிப்பெண் இருந்தால் எடப்பாடிக்கு போடுவேன் என்று தடவித் தடவி தேடிய ராமதாஸ், இன்றைக்கு எடப்பாடி ஆட்சியை பாராட்டிப் பேசுகிறார். இதெல்லாம் எதற்காக, கூட்டணியில் சேர்ந்து 7 சீட்டுகளை பெற்று அதில் நான்கு சீட்டுகளை தலா 50 கோடிக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கதான்.”முதல்வருக்கு விருந்து வைக்கிறேன் என்று கூறி தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்தது எதற்காக? போலீஸ் பாதுகாப்புடன் ‘சூட்கேஸ்களை’ தைலாபுரம் தோட்டத்திற்கு கொண்டு செல்லவே என்று அவர் கடுமையாக சாடினார்.வன்னிய அறக்கட்டளை சொத்துக்களை சூறையாடியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அதை நிரூபிக்கவும் தயார். அப்போது, இருவரும் அரசியலை விட்டு விலகி விட்டால் விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் சாதிச்சண்டை இருக்காது. குடிசைகள் எரியாது. கடலூர் சிறையே காலியாகும். நல்லிணக்கம் நிலவும். அமைதி தவழும் என்றும் வேல்முருகன் கூறினார்.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் க.ஜெய்சங்கர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர்.முன்னதாக, விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திலும் வேல்முருகன் உரையாற்றினார். கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

;