tamilnadu

மறவாது உங்கள் பணி

வங்கி ஊழியர் இயக்கத்தின் மிக முக்கியமான ஆளுமை தோழர் வி.சுந்தரம். அவரது பொது வாழ்வின் துவக்கம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. எழில் என்ற அவரது புனை பெயர்தான் வங்கி அரங்கத்திற்கு வெளியே பிரபலமானது. நான் 1985 ல் இராமநாதபுரம் எல்.ஐ.சி யில் சேர்ந்தேன். அதே காலத்தில் அவர் மதுரையை நோக்கி நகர்ந்து விட்டார். அன்றைய முகவை சிவகங்கை மாவட்டசிபிஎம் மாவட்டச் செயலாளர் அருமை தோழர்கருப்புராஜா என்னிடம் சொல்வார். “ நடுத்தர வர்க்கதொழிற்சங்க ஊழியர்களுக்கு முன்னுதாரணம் தோழர் எழில்”. அந்த அளவிற்கு சாதாரண மக்களோடு ஊடாடியவர். உரையாடியவர். அவர்களின் ஆசிரியராக திகழ்ந்தவர். பொதுவுடைமை, முற்போக்கு அமைப்புகளோடு இணைந்து அவர்ஆற்றிய பங்கை பலரும் என்னோடு பேசினார்கள். அவரை பார்க்காமலே அவரைப் பற்றியசித்திரம் எனது மனதில் குடி கொண்டது.ஆனால் அவரை முதலில் நான் பார்த்தது வங்கி தொழிற்சங்க தலைவராகவே, ஓர் கலந்துரையாடலுக்காக.

இராமநாதபுரம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் அழைத்திருந்தோம். அதில் அவருக்கு அளிக்கப்பட்ட தலைப்பு “ஊதியக் கட்டமைப்பின் அடிப்படை கணக்கீடுகள்” என்பதாகும். Merger, Revision element,Neutralization... இப்படி பல வார்த்தைகளுக்கான பொருளை எளிமையான கணக்கீடுகள் மூலமாக அந்த சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். பஞ்சப்படி ஈட்டிற்கான சதவீதம் அடிப்படை ஊதிய நிர்ணயத்திக்கேற்றாற் போல் எப்படிமாற்றி அமைக்கப்படும் என்று விளக்கினார். இன்று வரையிலும் ஓர் ஊதிய உயர்வு உடன்பாட்டைஅணுகும் போது 1988 ன் அந்த சந்திப்பு மனதில் வந்து நிற்கும். என் நினைவில் அந்த சந்திப்பில் திருச்சி ஜெயசீலன் ( எல்.ஐ.சி), எழுத்தாளர் சி.சுப்பாராவ் (மதுரை) ஆகியோர் இருந்தனர். இத் தோழர்களும் அச்சந்திப்பை அடிக்கடி நினைவு கூர்வார்கள். ஒரு கூட்டம், ஒரு சந்திப்பு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலுமென்பதற்கு அவரின் ஆழமான அறிவாற்றலே காரணம். 


;