tamilnadu

விழுப்புரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்  

விழுப்புரம், ஜன.29- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர்  பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டு,  அறுவடை பணிகள் துவங்கி நடக்கிறது. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் முன்வைத்த  கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்  மூலம் புதியதாக முட்டத்தூர், பனமலைபேட்டை, தீவனூர், ஆவணிப்பூர், உப்புவேலூர் மற்றும் சித்தலிங்கமடம் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், சுமார் 50 ஆயிரம் மெட்ரிக்  டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சம்பா பருவத்தில் சன்னரக நெல்லுக்கு மாநில அரசின் ஊக்கதொகையோடு சேர்த்து குவிண்டாலுக்கு 1,905 ரூபாய் என்ற வீதத்திலும், இதர பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,865 ரூபாய் என்ற வீதத்திலும், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்க ளுடைய நெல்லை, புதியதாக துவங்கவுள்ள நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களில் விற்பனை செய்து கொள்ளலாம்.

;