tamilnadu

மணல் கடத்தலுக்கு துணை ஆய்வாளர் மீது புகார்

விழுப்புரம்.ஜன.12- மணல் கடத்திய ஆசாமிக்கு துணையாக இருந்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட தொரவி கிராம தலித் மக்கள், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் எங்கள் கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், திறந்தவெளி கிணறு வெட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, இதற்கான பணிகள் கடந்தாண்டு டிசம்பர் 26 ஆம் தேதி நடந்தது. இந்த கிணறு வெட்டும் போது அதிகளவு மணல் கிடைத்தது. அந்த மணலை, கிணறு வெட்டும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தினர் எங்கள் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரிடம் ஒப்படைத்தனர். அவர் கிணறு தோண்டும் போது கிடைத்த மணலை, தனது சொந்த பயன்பாட்டிற்காக லாரி மற்றும் டிராக்டர் மூலம் 40 லோடுகளை கடத்திச் சென்றுள்ளார்.  இது தொடர்பாக நாங்கள், விக்கிர வாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த தன் பேரில், மணல் தோண்ட பயன்படுத்திய பொக்லைன் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கைக்கோரி, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் கோரிக்கை மனு அளித்தோம்.  அந்த மனு மீது நடவடிக்கை எடுப்ப தாகக் கூறிய காவல் ஆய்வாளர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பறிமுதல் செய்த வாகனங்களையும் உரியவரிடம் ஒப்படைக் கப்பட்டு விட்டது. மணலை கொள்ளை யடித்த நபர்கள் மீதும், பறிமுதல் செய்த வாகனத்தை விடுவித்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தமனுவில் குறிப்பிட்டுள்ளனர். இக்கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதி குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் சிமெண்ட் சாலை, திறந்த வெளி கிணறு உள்ளிட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட பணிகளுக்கு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி அப்பணிகள் தற்போது தரம் நிரந்தரமாக இருக்குமா என்ற கேள்விக் குறியோடு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் இங்கு குடிநீருக்காக வெட்டிய கிணறு பள்ளத்தில் மணல் கிடைத் துள்ளது, தற்போது மணல் தட்டுபாடு உள்ள நிலையில் மணலை இரவோடு இரவாக திருடிச் சென்று உள்ளனர். இதுகுறித்து கேட்ட அப்பகுதி தலித் மக்களை இரண்டாம் ஒப்பந்ததாரர் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் எப்ப வேண்டும் என்றாலும் அப்பகுதியில் இருதரப்பு மோதல் உருவாகும் என தலித் மக்கள் அச்சத்துடன் பேசி வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாக மும், காவல்துறையும் இந்த பிரச்சனையில் தலையிட்டு சுமூகமாக முடித்து வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.  சென்ற பொங்கல் பண்டிகையின் போது இரு தரப்பினரும் மோதிக் கொண்டு விக்கிரவாண்டி காவல் நிலையம் வரை சென்று சமாதானம் செய்து வைக்கபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது, இக்கிராம பிரச்சனையை அலட்சியப் படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் அங்கு நடக்கும் அரசுப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து தரத்தை சோதிக்க வேண்டும் என்பதே தலித் மக்கள் கோரிக்கை.

;