tamilnadu

img

செங்கொடி தாழ்த்தி மாநில செயற்குழு அஞ்சலி

சென்னை, மே 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான தோழர் கே. வரதராசன் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது என  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறியுள்ளார்.

கரூரில் தமது மகன் வீட்டில் தங்கி யிருந்த தோழர் கே.வரதராசன் அவர்கள், சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில், சனிக்கிழமை யன்று மதியம் 2 மணியளவில்  கால மானார். தோழர் கே.வரதராசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கட்சியின் மாநில  செயற்குழு சார்பில் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தோழர் கே.வரதராசன் 1946 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். கட்டு மான துறை வரைவாளர் படிப்பை முடித்த அவர், நெல்லை பாளையங் கோட்டையில் பொதுப் பணித்துறை பணியில் சேர்ந்தார். நெல்லை மாவட்ட த்தில் பணியாற்றிய போது, செங்கொடி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்னர், அரசுப் பணியை துறந்து விட்டு கட்சியின் முழு நேர ஊழியரானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி வட்டக்குழு செயலாளராக பணியாற்றினார். கட்சியின் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டச் செயலாளராக பணி யாற்றினார். பின்னர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் மத்தியக் குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட தோழர் கே.வரதராசன், மூன்று முறை அர சியல் தலைமைக்குழுவுக்கு தேர்வு  செய்யப்பட்டு திறம்படபணியாற்றினார். அர்ப்பணிப்பும் உறுதியும் மிக்க  கம்யூனிஸ்ட்டாக தன்னை செதுக்கிக் கொண்ட தோழர். கட்சி மற்றும் விவசாய சங்கத்தின் பல போராட்டங்களுக்கு முன்னின்று தலைமை தாங்கியவர். மார்க்சியத்தை எளியமுறையில் தோழர்களுக்கு பயிற்றுவிப்பதில் கவனம் செலுத்தியவர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் பின்னர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். தற்போது சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். அவசர நிலைக் காலத்தில் தலை மறைவாக இவர் இயக்கப் பணியாற்றிய நிலையில், ஸ்ரீரங்கத்தில் உள்ள இவரது வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் ஒட்டி தண்டோரா போட்ட  நிலையிலும், இவரும் இவரது குடும்பத் தினரும் அஞ்சாமல் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்திய தத்துவ தரிசனம்’ என்ற நூலையும், கிராமப்புற விவசாய இயக்கம் தொடர்பான பல சிறு நூல் களையும் எழுதியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெளி யிடப்பட்ட இசைப் பேழைகளில் இவரது பாடல்களும் இடம் பெற்றன. இவரது துணைவியார் சரோஜா அம்மாள், ஆறு வருடங்களுக்கு முன்பு காலமானார். தோழர் கே.வரதராச னுக்கு பாஸ்கரன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். அவருடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கட்டுரை யாளருமான கே.லட்சுமணன் இவரது மூத்த சகோதரர் ஆவார். இளைய சகோதரர் கே.அனந்தராஜன் தீக்கதிர் திருச்சி பதிப்பின் பொது மேலாளராக பணியாற்றியவர். இவர்களது குடும்பம் முழுவதும் கட்சிக் குடும்பம் ஆகும்.

சிறந்த அமைப்பாளராக விளங்கிய தோழர் கே.வரதராசன் மாநிலம் முழுவதும் ஏராளமான தலைவர்களை உருவாக்கியவர். மிகவும் எளிமையாக அனைவருடனும் பழகக் கூடிய பாங்கு பெற்றவர். அவருடைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விவசாயிகள் இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தாருக்கு கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதுடன், மாநிலம் முழுவதும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு  கேட்டுக்கொள்கிறோம். மறைந்த தலைவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று காலை 11 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

என்.சங்கரய்யா, து.ராஜா இரங்கல்

தோழர் கே.வரதராசன் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் தெரிவித்துள்ள கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  எம்.பி., து.ரவிக்குமார் எம்.பி., உள்ளிட்ட தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும் தெரிவித்துள்ளனர்.

அர்ப்பணிப்புமிக்க கம்யூனிஸ்ட் -  சீத்தாராம் யெச்சூரி புகழஞ்சலி

தோழர் கே.வரதராசன் மறைவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியுற்றேன். அவர் ஓர் அர்ப்பணிப்புமிக்க கம்யூனிஸ்ட். தொழிலாளி வர்க்கம், விவசாய வர்க்கம் மற்றும் அனைத்து சுரண்டப்படும் மக்களுக்கு ஆதரவான போராட்டங்களில் ஓய்வின்றி முன்னோடியாகத் திகழ்ந்தவர் தோழர் கே.வரதராசன். கட்சியின் மத்தியக்குழுவிலும் அரசியல் தலைமைக்குழுவிலும் பல்லாண்டுகாலம் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். செவ்வணக்கம், தோழர் கே.வி.!


 


 

 


 

;