tamilnadu

தொழிற்சங்க உரிமை, விடுதலைப்போராட்ட பாரம்பரியமிக்க மண் தமிழகம்.... சிஐடியு மாநாட்டு வரவேற்புரையில் அ.சவுந்தரராசன் பெருமிதம்

முகமது அமீன் நகர், (சென்னை):
தொழிற்சங்க உரிமை, விடுதலைப்போராட்ட பாரம்பரியமிக்க மண் தமிழகம் என்று சிஐடியு தமிழ் மாநில தலைவரும் மாநாட்டு வரவேற்புக்குழு தலைவருமான  அ.சவுந்தரராசன் கூறினார்.சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் தோழர் முகமது அமீன் நகரில் தோழர் சுகுமால் சென் அரங்கில் துவங்கிய சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டில் அவர் ஆற்றிய வரவேற்புரை வருமாறு:

சிஐடியு தமிழ் மாநிலக்குழு  நடத்தும் 3வது அகில இந்திய மாநாடு இதுவாகும். ஏற்கனவே  1979, 2003ஆம் ஆண்டுகளில் அகில இந்திய மாநாட்டை நாங்கள் நடத்தியிருக்கிறோம். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில்  சென்னை மாகாணம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவின் ஒருபகுதி, கேரளா ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. சென்னை மாகாணத்தில் வலுவான தேசிய விழிப்புணர்வு உருவாகியிருந்தது. இந்த மாகாணம் வளமான விடுதலைப்போராட்டம் மற்றும் தொழிற்சங்க இயக்க பாரம்பரியத்தைக் கொண்ட பகுதியாகும். மொழிவாரி மாநிலங்கள்  உருவாக ஜனநாயக முறையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்ற பகுதியாகும். 

சுதந்திரப்போராட்ட தியாகிகள்
சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், நிலப்பிரபுத்துவ முறை பரவலாகக் காணப்பட்ட பகுதியாகும். மூடநம்பிக்கைகள் மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய பல சமூக சீர்திருத்தவாதிகள், சுதந்திரப்போராட்ட வீரர்கள் நிறைந்த பகுதியாகும்.அவர்களில் சித்தர்கள், இராமலிங்க வள்ளலார், நாராயண குரு, அயோத்தி தாசர், வைகுண்ட சுவாமிகள், பசவய்யா, சகஜானந்தா,  வீர கேசலிங்க பந்துலு, மகாகவி பாரதியார், தந்தை பெரியார் ஆகியோர் மட்டுமல்லாமல் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்து மறைந்த ம.சிங்காரவேலர், கிருஷ்ண பிள்ளை, இஎம்எஸ், ஏ.கே.கோபாலன், பி.சுந்தரய்யா, பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் உள்ளிட்டோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

தென்னிந்தியாவின் முதல் வேலைநிறுத்தம்
சென்னை மாகாணத்தில் தான் விடுதலைப்போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. சுதந்திரப்போராட்டத்தின் போது சுதேசி இயக்கத்தின் ஒருபகுதியாக  செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் முதலாவது  கப்பல் சேவையை நடத்தினார். இது  சுதந்திரப்போராட்டத்திற்கு புதிய வடிவம் கொடுத்தது. வழக்கறிஞரான அவர் தொழிலாளர்களைத் திரட்டி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தார்.  1908 ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராகத்  தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதுவே தென்னிந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட முதல் வேலைநிறுத்தம் ஆகும்.

முதலாவது தொழிற்சங்கம்
சீர்திருத்த இயக்கங்கள்,  விடுதலைப்போராட்டத்தின் எழுச்சி போன்றவை இந்தியாவில் முதலாவது தொழிற்சங்கம் 1918 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில்  துவங்குவதற்குக் காரணமாக இருந்தன. பின்னி ஆலையில்  ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ என்ற பெயரில் அந்த சங்கம் தொடங்கப்பட்டது. அந்த சங்கம் ஒரு பெரிய அரசியல் சக்தியாகவும் இருந்தது. இந்த தொழிற்சங்கத்தால் 1921 இல் இரண்டு நாள் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. இதனால் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பி.பி.வாடியாவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.  இதற்கு இந்தியாவில் மட்டுமல்ல, பிரிட்டன் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் 1926ல் தொழிற்சங்க சட்டம் இயற்றவேண்டிய கட்டாயம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஏற்பட்டது.

முதல் செங்கொடி ஏற்றப்பட்ட நகரம்
இந்த சென்னை மாகாணத்தில் தான்  1923 இல் சிந்தனைச் சிற்பி ம. சிங்கார வேலரால் இந்தியாவிலேயே முதல் முறையாக  மே தினம் கொண்டாடப்பட்டு  செங்கொடி ஏற்பட்டது. 8 மணிநேரம் வேலை என்ற கோரிக்கையை எழுப்பி போராடியதற்காகப்  புதுச்சேரியில் 7 தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொழிற்சங்க உரிமையை வலியுறுத்தியதற்காகக்   கோவையில்  நான்கு தோழர்கள் தூக்கிலிடப்பட்டனர். இப்படி தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் கூட்டுப்பேர உரிமைக்காகவும்  எண்ணற்ற போராட்டங்களும் தியாகங்களும்  புரிந்த  மாகாணம் இதுவாகும். 

சுதந்திரத்திற்குப் பிறகு 1952 ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல்களில், சட்டமன்றத்தில் இடதுசாரிகள் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தனர். சிஐடியு ஸ்தாபக பொதுச் செயலாளர் தோழர் பி.ராமமூர்த்தி எதிர்க்கட்சித் தலைவரானார். எங்களது தோழர்கள் சட்டப்பேரவையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பேசினர். அனைத்து  மொழிகளையும் அலுவல் மொழியாக மாற்றக் கோரி போராடிய முன்னோடிகள் அவர்களாவர்.
தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளுக்காகவும் இடதுசாரிகள் எழுப்பிய பிரச்சனைகளுக்காகவும் போராடியது.   இதனால் 1957 இல் தமிழ்நாடு என்ற தனிமாநிலம் உருவாக்கப்பட்டது.  சென்னை மாகாணம் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றுவதற்கான கோரிக்கை தமிழக சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் இடதுசாரிகளால் எழுப்பப்பட்டது.  மதராஸ் மாகாணத்தைத் தமிழ்நாடு என்று பெயர்மாற்ற வேண்டும் என்று சங்கலிங்கனார் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து  உயிர்துறந்தார்.

 தொழிற்சங்க ஜனநாயகத்திற்காகவும் தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய சங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காகவும் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களுக்கு இடதுசாரி தொழிற்சங்கத்தலைவர்கள் தலைமை தாங்கினர்.  இதனால் சமூகத்தில் இடதுசாரி சிந்தனைகளின் தாக்கம் அதிகரித்தது. தொழிற்சங்க இயக்கமும் பெருமளவில் வளர்ந்தது. நீடித்த போராட்டங்கள் மற்றும் தியாகங்களுக்குப் பிறகு மிகப்பெரிய ஆலைகளில் தொழிற்சங்க உரிமை நிலைநாட்டப்பட்டது. ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற நிலையும் உருவானது.சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில்  தொழிற்சங்கங்களை ஏற்படுத்துவதிலும் கூட்டுப்பேர உரிமையை நிலைநாட்டுவதிலும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டும் பன்னாட்டு நிறுவனங்களில் ஆலை நிர்வாகத்தால்  பழிவாங்கல் நடவடிக்கைகளை மீறியும் செங்கொடி இயக்கம் முன்னேறி வருகிறது என்று கூறிக்கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். 

பழமையான நாகரீகம் 
வைகை நதியின் கரையில் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் கி.மு 6வது நூற்றாண்டில் வரலாற்றுக்கு முந்தைய  மற்றும் மிகப்பெரிய நாகரீகம்  இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.  பண்டைய வரலாற்றைக் கொண்ட இந்த நிலம், புகழ்மிக்க விடுதலைப் போராட்டங்களைக் கண்ட நிலமாகும். அந்த வரலாற்றைக் கொண்ட இந்த மண்ணிலிருந்து சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாகவும் சென்னை மாநகர உழைக்கும் மக்கள் சார்பாகவும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

;