tamilnadu

இந்நாள் மே 19 இதற்கு முன்னால்

1649 - ‘காமன்வெல்த்’ என்ற பெயரில் இங்கிலாந்து குடியரசானது! ஆம்! வரலாறு முழுவதும் முடியாட்சியிலேயே இருந்துவரும் இங்கிலாந்தில், சற்றேறக்குறைய 11½ ஆண்டுகளுக்கு, குடியரசும் இருந்தது! இதற்கும், தற்போது இருக்கிற காமன்வெல்த் நாடுகள் என்ற கூட்டமைப்பிற்கும் தொடர்பில்லை. இங்கிலாந்தின் பாராளுமன்றம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதாக இன்றி, அவ்வப்போது தேவைக்கேற்ப உருவாக்கி, குறிப்பிட்ட பதவிக்காலம் எதுவுமின்றி, அரசருக்குப் பிடிக்காதபோது கலைக்கப்படுவதாகத்தான் அக்கால இங்கிலாந்தில் இருந்தாலும்கூட, முழுமையான அதிகாரம் படைத்தவராக அரசரை ஏற்க, பிரபுக்கள் என்னும் குறுநில மன்னர்களின் அவையாகவே இருந்த, பாராளுமன்றம் எப்போதுமே தயாராக இல்லை.  இந்த முரண்பாடுகளால் நடைபெற்ற ஏராளமான உள்நாட்டு யுத்தங்களில், 1642-46இல் நடைபெற்றவை முதல், 1648 பிப்ரவரியிலிருந்து, ஆகஸ்ட் வரை நடைபெற்றவை இரண்டாவது, 1649-51இல் நடைபெற்றவை மூன்றாவது  ஆங்கிலேயே உள்நாட்டுப் போர்களாகக் குறிப்பிடப்படுகின்றன. முதல் போரில் நாடாளுமன்ற ஆதரவாளர்கள் வெற்றிபெற்று, அரசர் முதலாம் சார்லசையும் கைதுசெய்துவிட்டாலும், கோரிக்கைகளை ஏற்க அவர் தயாராக இல்லாததால் இரண்டாவது போர் ஏற்பட்டது. அதாவது, கைது செய்யப்பட்டாலும்கூட, அரசதிகாரம் அரச மரபின் தெய்வீக உரிமை என்ற அடிப்படையில், அவரை அரசராகவே ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை ஏற்கக் கோரினர்.

அவர் மறுத்த நிலையில் நடைபெற்ற இரண்டாவது போரின் இறுதியில், முதலாம் சார்லஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்தே, இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் பொதுவான நலன்களுக்கான அமைப்பு என்ற பொருளில் இந்த அரசு உருவாக்கப்பட்டு, பின்னர் ஸ்காட்லாந்தும், அயர்லாந்தும் இணைந்துகொண்டன. இச்சட்டத்தை இயற்றிய ‘ரம்ப் பாராளுமன்றம்’ கலைக்கப்பட்டபோது, போரின் வெற்றிக்குக் காரணமானவர்களில் ஒருவரான ஆலிவர் க்ராம்வெல் அரசின் காப்பாளராக(லார்ட் ப்ரொட்டெக்டர்) நியமிக்கப்பட்டார். அரச மரபின் தெய்வீக உரிமைகளை வலியுறுத்தும் ‘ராயலிஸ்ட்கள்’ தொடர்ந்து போராடியதால் மூன்றாம் போரும் நடந்தது. 1658இல் க்ராம்வெல் மறைந்ததும் இந்த அரசு பலவீனமடைய, நாடுகடத்தப்பட்டிருந்த இரண்டாம் சார்லசின் உறுதிமொழிகளை ஏற்று, 1660 டிசம்பரில் அவருக்கு முடிசூட்டப்பட, காமன்வெல்த் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அடிமைப்படுத்தியிருந்த நாடுகளுக்கு விடுதலையளிக்கவேண்டிய நெருக்கடியேற்பட்டபோது, அவற்றின் கூட்டமைப்பிற்கு இரண்டாம் எலிசபெத் இந்தப் பெயரைச் சூட்டினார். முடியரசு மீண்டும் ஏற்பட்டபின், க்ராம்வெல்லின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டது!

;