tamilnadu

img

4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19 இடைத்தேர்தல்

புதுதில்லி,ஏப்.9-

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி முதற்கட்ட தேர்தல் வருகிற 11 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழக சட்டமன்றத்தின் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் இந்த தேர்தலுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்தது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும், நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருந்தது.இதற்கிடையே சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் காலமானார். இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏப்ரல் 9 செவ்வாயன்று அறிவிப்பு வெளியிட்டது. ஏப்ரல் 22 வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 29 வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் ஆகும். ஏப்ரல் 30 வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை, மே 2 வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசிநாள், மே 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.