tamilnadu

img

உயிரை பணயம் வைத்து பசியாற்றும் ரேசன் கடை ஊழியர்கள் முகக்கவசம் கூட கொடுக்க மறுக்கும் அரசு....

கொரானா தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.  இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவது மட்டுமல்ல மக்களும் சொல் லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.    
முகக்கவசம் கூட இல்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் அரசு அறிவித்த நிவாரண தொகை மற்றும்உணவு தானியங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நியாய விலை கடை ஊழியர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். தற்போது அரசு அறிவித்துள்ள நபர் ஒருவருக்கு இரண்டு முகக்கவசம் வீதம் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.அதேசமயம் நியாயவிலைக்கடை ஊழியர்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள், கையுறை, கிருமிநாசினி, சோப்பு போன்றவற்றை வழங்கவும் கழிப்பறை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப் படவில்லை.

நினைவூட்டியும் நடவடிக்கை இல்லை
தொற்றால்  நியாயவிலைக்கடை ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர்   உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு உபகரணங்கள்வழங்க ஆணை வழங்கப் பட்டு தொடர்ந்து நினைகூட்டல் கடிதங்கள் அளிக்கப் பட்டிருந்தும் துறையின் உரிய கண்காணிப்பும் மேற்பார்வையும் இல்லாததால் பெரும் தொய்வு உள்ளது. மேலும் எவ்வித நிதிஆதாரமுமின்றி உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் ஊதியத்திற்கே பணம் இல்லை இதெல்லாம் வாங்குவதற்கு எங்கே போவது என திகைத்து வருகின்றனர்.    

பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசு
நியாயவிலைக் கடை குறைபாடு அனைத்திற்கும் ஊழியர்கள்மீது பழிசுமத்தி அரசு தனதுபொறுப்பை தட்டிகழிக்கிறது. மக்களுக்கு வழங்கும் உணவு தானியங்கள் எடைக்குறைவு என்பது தொடர்ந்து கூறப்படும் பழிச்சொல் எடை குறைவுக்கு யார் காரணம் என்பது அரசுக்குத் தெளிவாகத் தெரியும். நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்து எடைபோட்டு இறக்கும் நிலை இன்றுவரை ஏற்கப்படவில்லை. ஒவ்வொரு மூட்டைக்கும் 5 கிலோ முதல் 10 கிலோ வரை குறைவாக வருகிறது என ஊடகங்களில் செய்திவெளியாகிறது. சமச்சீர் மூட்டைகளாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இதுநாள்வரை ஏற்கப்படவில்லை. நியாய விலை கடைகளில் எடைபோட்டு இறக்குவது, பாக்கெட் முறையினை உறுதி செய்யாமல் எடை குறைவு என்பதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது என்பதை அனைவரும் அறிவர்.                  

முழு ஒதுக்கீடு இல்லை                    
இரண்டாவதாக குடும்ப அட்டைகளுக்கான முழு ஒதுக்கீடு என்பது இதுநாள் வரை பூர்த்தி செய்யப் படவில்லை. ஏற்கனவே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உணவுதானிய வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல  தமிழக அரசு 2016 நவம்பர்1 ஆம் தேதி அறிவித்த அளவீடுகளின்படி இதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி மட்டுமே  வழங்கப்பட்டு வந்துள்ளது. துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ,மண்ணெண்ணெய் ஆகியவை முழுஒதுக்கீடு இல்லை என்பதை அனைவரும்அறிவர்.தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள பிரதம மந்திரியின் ஏழைகள் நலன் காக்கும் உணவு வழங்கல் திட்டம் மூலம் குடும்ப அட்டையில் உள்ள நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் கூடுதல் அரிசியினை ஏப்ரல் மாதத்தில் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் உணவுத்துறை ஆணையே ஏப்ரல் 27ம் தேதிதான் வழங்கப்பட்டது.

இதனால் ஏப்ரல் மாதத்திற்கான மத்திய அரசு அளித்த கூடுதல் அரிசி மக்களுக்கு சென்றடையவில்லை. மே மாதத்திற்கான ஒதுக்கீடும் சீரமைக்காத நிலையில் 11.5.2020 இல்தான் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில்  குடும்பங்களுக்கான அளவீடுகள்  தெரிவிக்கப்பட்டது. நியாயவிலைக் கடைகளில் உள்ள    POS கருவியில் இடம்பெற்ற அளவீடுகளும், அரசு தெரிவித்த அளவீடுகளும் மாறுபட்டு இருந்ததை அனைவரும் அறிவர். ஒதுக்கீடுகள் சரிசெய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தபின்  எஸ். எஸ். ஆர்.  எம். பி. ஆர். என்ற குறியீட்டில் ஒதுக்கீடுகள் பதிவு செய்யப்பட்டது.ஏற்கனவே டோக்கன் முறையில் அரிசி வழங் கப்பட்ட பின் மீண்டும் மத்திய அரசின் திட்டத்தின் படி அரிசி வழங்கப்படும் என்றறோ (கூடுதலாக நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ) ஏப்ரல் மாதம் நிலுவையிலுள்ளதில் 50விழுக்காடு  மே மாதத்துடன் சேர்த்து வழங்கப்படும்  என்றோ அடுத்த 50விழுக்காடு ஜூன் மாதத்தில் வழங்கப்படும் என்றோ தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வந்த அளவீடுகளை மாற்றி தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப்படி நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுவது குறித்து உரிய விழிப்புணர்வு விளம்பரங்களும் செய்யப்படவில்லை.   ஜூலை மாதத்திற்கான அளவிடுகள் மீண்டும் திருத்தப்பட்டன.  இதன் காரணமாக ஒதுக்கீட்டின் படி அரிசி கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நிரந்தரமாக மாதம்தோறும் வழங்கும் அளவுகூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதும், பிரதம மந்திரியின் ஏழைகள் நலன் காக்கும் உணவு வழங்கல் திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய ஒதுக்கீடு சரியான நேரத்தில் வழங்காததும் இதற்கு காரணம் என்பதை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து  ஊழியர்கள் மீது வழக்கம்போல் பழி சுமத்தப்படுகிறது. மத்திய அரசின் ஏழைகள் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியினை நவம்பர் மாதம் வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.மேலும் போதிய ஊழியர் இன்றி நகர்வு செய்யப் படுவதும், நியாயவிலைக் கடைகளில் போதிய இடம் இல்லை என  உணர்ந்தும் நகர்வை கட்டாயப்படுத்துவது, நியாயவிலைக் கடைகளில் தேங்கி உள்ள காலி சாக்குகளை அப்புறப்படுத்தாமல் இருப்பது கூட்டுறவுத்துறையும், உணவுத்துறையும் நன்குஅறியும். ஓய்வின்றி பெரும் சிரமத்திற்கு இடையே பணியாற்றி வரும் நியாயவிலைக் கடை ஊழியர் மீது பழி சுமத்தி அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது.    

போக்குவரத்து செலவு
கொரானா ஊரடங்கு  காலத்தில் பொது   போக்குவரத்து முடக்கப்பட்டதால் போக்குவரத்து செலவுக்கான தொகை அளித்திட வேண்டும் மற்ற துறை ஊழியர்கள் வழங்கியது போன்று இவர்களுக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக அளித்திட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தபோது நாள் ஒன்றுக்கு ரூபாய் 200  பயணச்செலவுபடியாகவும், ஏப்ரல் மாதத்திற்கான ஊக்கத்தொகை விற்பனையாளருக்கு ரூ2,500 கட்டுனருக்கு ரூபாய் 2ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.ஊழியர்களுக்கான நிகழ்வினச்சலுகை தொடர்ந்து வழங்கப்படுவதில்லை.  ஊக்கத்தொகை ஒரு மாதத்துடன் நின்றுவிட்டது. இது போன்ற ஒரு சிறு சிறு  உதவிகள் கூட பலகூட்டுறவு சங்கங்களில் நிதியின்றி வழங்கப்படவில்லை என தகவல்கள் வருகிறது.

ஊதியம் தர இயலாத சங்கங்கள்
மூன்று மாத காலமாக விலையில்லா பொருட்கள் வழங்குவதன் காரணமாக கூட்டுறவு சங்கங்களுக்கு வரவேண்டிய விளிம்பு தொகை மற்றும் மானியத் தொகை வராத காரணத்தினால் பல கூட்டுறவு சங்கங்களில் ஊதியம் பெற வழியின்றி உள்ளனர். இதனால் நியாய விலைகடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மத்திய கூட்டுறவு வங்கியின் காசுக்கடனை எதிர்நோக்கியுள்ளனர்.இத்தகைய சூழலில்தான் தற்போது மீண்டும் நிவாரணதொகை மற்றும் உணவு தானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டுமென்ற அரசு உத்தரவு வந்துள்ளது.மேலும் அடுத்த மாதம் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டு முக கவசம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
 மக்களின் பசிப்பிணியை உணர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடுமையான பணியினை செய்து வரும் நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கைகளான உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு அரசுத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது போன்று நிவாரணத்தொகை, மருத்துவ காப்பீட்டு தொகை உயர்த்துதல், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை, தொற்றிலிருந்து பாதுகாக்க கையுறை, கிருமிநாசினி, சோப்பு ,முக கவசம் உள்ளிட்டவைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் இதையெல்லாம் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே நியாயவிலைக்கடை ஊழியரின் வேண்டுகோள். அரசும்  உணவு துறையும் கூட்டுறவு துறையும் உரிய நடவடிக்கை எடுக்குமா?           

===ஆ. கிருஷ்ணமூர்த்தி===
தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம். (சிஐடியு)

;