tamilnadu

img

நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டி,அக்.14- தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘போலிச் சாமியார்’ போல, பொய்களை அள்ளிவிட்டுப் போயிருக்கிறார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட நல்லாப்பாளையம், கடையம், பனமலை, சங்கீதமங்கலம், கல்யாணம் பூண்டி, மேல்காரணை, கஞ்சனூர் கூட்ரோடு, நேமூர், எசாலம் ஆகிய   பகுதிகளில், மதச்சார்பற்ற   முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் நா.புக ழேந்திக்கு ஆதரவு கேட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் திமுகதலைவர் ஆற்றிய உரையின் சுருக்கம்: இந்த இடைத் தேர்தலில் நீங்கள் எல்லோரும், நம்முடைய கழக வேட் பாளராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப் பட்டிருக்கும் புகழேந்திக்கு உதய சூரியன் சின்னத்தில் முத்திரையிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.

‘வெங்காயம்’

தமிழ்நாட்டில் ஒரு கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. விலை வாசி விஷம் போல் ஏறிக்கொண்டி ருக்கிறது. இதற்குப் பெரிய பட்டியலே போட முடியும்.  அதுமட்டுமல்ல, மின் இணைப்புக் கட்டணத்தையும் இப்போது உயர்த்தியிருக்கிறார்கள். அதாவது ‘சிங்கிள் பேஸ்’ இணைப்புப் பெற வேண்டும் என்றால் ரூ. 1,200  கட்டிக் கொண்டிருந்தோம். ஆனால், இனிமேல் 6,400 ரூபாய் கட்ட வேண்டிய ஒரு நிலை வந்திருக்கிறது.

அதேபோல், காய்கறி விலையும் விஷம் போல் ஏறிக்கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக, ‘வெங்காயம்’! வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணிலிருந்து கண்ணீர் வரும். ஆனால், இப்போது வெங்காய விலையைக் கேட்டாலே, கண்ணில் இருந்து கண்ணீர் வரும் அள விற்கு, வெங்காய விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி விலைவாசி யைக் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை யில் ஒரு கொடுமையான ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக் கிறது.

அடிமைகள்

அதுமட்டுமல்ல, மத்தியில் மோடி தலைமையில் இருக்கும் பாஜக ஆட்சிக்கு அடிமையாக இருக்கும் ஆட்சி யாகத்தான், இன்றைக்கு எடப்பாடியின் ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ கருத்துகளைச் சொல்ல முடியும். நேரமில்லாத காரணத்தால், நான் உங்களுக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். நம்முடைய வீட்டுப் பிள்ளைகள், நடுத்தர வீட்டில் பிறந்திருக்கும் பிள்ளைகள், அதேபோல் ஏழை - எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பிள்ளைகள் டாக்டராக வேண்டும் என்றெல்லாம், நம்முடைய கற்பனைக் கோட்டைகளை தொடர்ந்து கட்டிக் கொண்டிருந்தோம். ஆனால், அதெல்லாம் இனிமேல் நடக்காத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், நீட் என்ற ஒரு கொடுமை யான தேர்வைக் கொண்டுவந்து புகுத்தியிருக்கிறார்கள்.

ஏமாற்று நாடகம்...

அதுமட்டுமல்ல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மன்னிக்கவும் எடுபுடி பழனிசாமி, பிரச்சாரத்தில் ஒரு அப்பட்டமான பொய்யைச் சொல்லிவிட்டு போயி ருக்கிறார். அது என்னவென்றால், விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மிக மிக முக்கியமானது, நந்தன் கால்வாய் திட்டம். அந்தத் திட்ட த்தைப் பற்றி இங்கு வந்து ஒரு பச்சைப் பொய்யைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேறும். அதுபற்றி, சட்ட மன்றத்தில் 110 என்ற விதியை பயன்படுத்தி நான் அறிவித்திருக் கிறேன் என்று சொல்லிவிட்டுப் போயி ருக்கிறார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுகிற ஒரு நாடகமாக இதைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.  போலிச் சாமியார்களைப் போன்று ‘பொய்களைச்’ சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். திமுக ஆட்சி அமை ந்தவுடன், விழுப்புரம் மாவட்டத்தின் முக்கியத் தேவையாக உள்ளநந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்.  இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


 

;