புதுதில்லி:
நடப்பாண்டில், இந்தியப் பொருளாதாரம் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக- சுமார்20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வீழ்ச்சிஅடையும் என மத்திய அரசின் முன்னாள்நிதித்துறை செயலாளரான சுபாஷ் சந்திரகார்க் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில், மத்திய பாஜக அரசு, கடந்த மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அறிவித்தது.அதாவது 3 வாரங்களுக்குள் கொரோனா தொற்றுப்பரவலைக் கட்டுக் குள் கொண்டுவந்துவிட முடியும் என்று கணக்குப் போட்டு இதனைச் செய்தது. ஆனால், நினைத்தபடி நடக்கவில்லை. இதனால், மே 3, மே 17, மே 31 என்று நாள்குறித்து, பொதுமுடக்க காலத்தை தொடர்ந்து நீட்டித்து வந்தது. தற்போது சில தளர்வுகள் அளித்து- எனினும் ஜூன் 30வரை பொதுமுடக்கம் அமலில் இருப்பதாககூறியுள்ளது.ஆனால், இந்த தொடர் பொதுமுடக்கத் தால் கொரோனாவும் கட்டுக்குள் வரவில்லை என்பது ஒருபுறமிருக்க; நாட்டின்பொருளாதாரமும் இதற்கு முன் இல்லாதவீழ்ச்சிக்கு சென்று விட்டது.
கொரோனா தாக்கத்திற்கு முன்பு, 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 0.8 சதவிகிதம் என்று மதிப்பிட்ட, ‘பிட்ச்’ ரேட்டிங்ஸ் நிறுவனம், ஏப்ரலில் அதனை 0.3 சதவிகிதமாக குறைத்தது. ‘கிரிசில்’ நிறுவனமும் 1.8 சதவிகிதம் என்று கூறி, பின்னர் 1.3 சதவிகிதத்திற்கு வந்தது.இந்நிலையில்தான், மத்திய அரசின்முன்னாள் நிதித்துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க், இந்திய பொருளாதாரம் 10 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று அண்மையில் கூறியுள்ளார். “இந்தியாவில் மிகக் குறைந்த அளவில் பாதிப்பு இருந்தபோது நாடு முழுவதும்ஊரடங்கு கொண்டு வந்ததால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று வாரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்னும் தவறான நம்பிக்கையில் கொண்டு வரப்பட்ட பொதுமுடக்கம் இந்தியப் பொருளாதார வீழ்ச்சியை மேலும் அதிகரித்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.
“இதனை சரிசெய்ய மத்திய அரசு ரூ. 21 லட்சம் கோடி அளவிற்கான நிவாரண உதவியை அறிவித்துள்ளது. ஆனால், அந்த உதவியின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிதான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)மதிப்பில் பார்த்தால், இதன் அளவு 0.7 சதவிகிதம் மட்டுமே ஆகும்” என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ள கார்க், “இந்த உதவியால் நிச்சயம் இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு 2020-21 ஆம் வருடம் ஜிடிபி கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும்” என்று அபாயச் சங்கு ஊதியுள்ளார்.“ஏற்கெனவே பலர் கூறியது போல,அல்லாமல் இது 10 சதவிகித பொருளாதார வீழ்ச்சி- வருமான இழப்பின் மதிப்புஎன்று பார்த்தால் ரூ. 20 லட்சம் கோடி”என்றும், “இதற்கு, தவறாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கமே முக்கியக் காரணம்”என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.