தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 21 மதுரையில் புதன் (ஜுன் 24) அதிகாலை முதல் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரையில் அதிகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வந்தது. இந்த நிலையில் திங்களன்று மாலை சென்னையில் இருந்து அரசாணை வெளியானது. அதில் புதன் (ஜுன் 24) அதிகாலை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அறிவித்துள்ளார்.
மதுரையில் ஏற்கனவே கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்படும் என வணிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அரசு அறிவிப்பில் மதுரை மாநகராட்சி, மதுரை கிழக்கு ஒன்றியம், மதுரை மேற்கு ஒன்றியம், திருப்பரங்குன்றம் ஒன்றியம், பரவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- மத்திய, மாநில அரசு சார்ந்த அலுவலக பணிகள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒரு கி.மீ. தூரத்திற்குள் உள்ள கடைகளில் மட்டுமே அத்தியாவசிய தேவைக்குரிய பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பொதுவிநியோகம், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிற மாவட்டங்களிலும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாணையில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி, திருமங்கலம், சேடபட்டி, தே.கல்லுப்பட்டி, மேலூர், செல்லம்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளில் என்ன நிலை என்பது குறித்து தகவல் இல்லை. மதுரையில் ஜூன் 21-ஆம் தேதி வரை 705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு பேர் உயிரிழந்துள்ளனர், முன்னதாக “முறையான நிர்வாக ஏற்பாட்டினை உறுதிப்படுத்தினால்தான் மதுரை மண்டலத்திற்குட்பட்ட ஆறு மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும். நிலைமை இன்னும் கைமீறிப்போகவில்லை. ஆனால், வரும் வாரத்தை தவறவிட்டால் கடைசி வாய்ப்பினை தவறவிடுவதாகவே பொருள்; எனவே மாநில முதல்வர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’’ என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கேடசன் தமிழக முதல்வரை கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் கொரோனா தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தர்மேந்திரபிரதாப் யாதவ் திடீரென மாற்றப்பட்டு டாக்டர் சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களிடம் அச்சம் மேலோங்கியுள்ள இந்த நேரத்தில் துரித நடவடிக்கைகள் மூலம் நோய்பரவலாக்கத்தை கட்டுப்படுத்தி நம்பிக்கையை உருவாக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் உடனடிக் கடமை. ஆய்வுக்கூட்டத்தை தொலைபேசியிலும், காணொலியிலும் மட்டும் நடத்தும் காலமல்ல அறிந்துகொள்ளவேண்டும்; சந்திரமோகன் விரைவில் மதுரைக்கு வருகை தரவேண்டுமெனவும் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.