tamilnadu

img

முதலாளித்துவ நெருக்கடியின் விளைவே மக்கள் மீதான தாக்குதல்கள்

உலகத் தொழிற்சங்க சம்மேளன தலைவர் மக்வாய்பா பேட்டி

சென்னை, ஜன.25- வலதுசாரி அரசுகள் தொழிலாளர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் தொடுக்கிற தாக்குதல்கள் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் வெளிப்பாடுதான் என்று உலகத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஸ்வாண்டில் மைக்கேல் மக்வாய்பா கூறினார். சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ள, தென்னாப்பிரிக்க தொழிலாளர் கலைஞருமான மக்வாய்பா சனிக்கிழமையன்று (ஜன.25) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.  சிஐடியுதனது 50வது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், உலகத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (டபிள்யூ.எப்.டி.யு.) தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“சிஐடியு மாநாட்டு ஏற்பாடுகளும், பிரதிநிதிகள் ஈடுபாடும்,  விவாதிக்கப்படும் பொருள்களும் என்னை வெகுவாக ஈர்த்துள்ளன.  கடுமையான நிலைமைகளை எதிர்கொண்டு இந்திய தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட நடத்துகிற போராட்டங்கள் அனைத்து நாட்டு தொழிலாளி வர்க்க இயக்கங்களின் கவனத்திற்குரியவை. அமைப்பு சார்ந்த வலிமையோடு செயல்படும் சிஐடியு, எமது டபிள்யூ.எப்.டி.யு. அமைப்பின் அங்கமாக இருப்பது பெருமைக்குரியது,” என்றார் அவர். இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இங்கு மட்டுமே காணக் கூடிய தனித்துவமானவை அல்ல. முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் பொருளாதார வீழ்ச்சி,  வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் கடுமையாக உருவாகியுள்ளன.  முதலாளித்துவம் தனது நெருக்கடியை சமாளிக்க முதலில் கைவைப்பது தொழிலாளர் நலன்களிலும் உரிமைகளிலும்தான். அவர்களது ஓய்வூதியம் போன்ற பலன்கள்தான் பாதிக்கப்படுகின்றன. தொழிலாளர் நலன்கள் பறிக்கப்படுவதுதான் தொடர்ச்சியாக பெண்கள், இளைஞர்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினர்களும் தாக்கப்படுகிறார்கள். வேலையின்மை அதிகரிப்பால் நேரடியாகத் தாக்கப்படுவது இளைஞர்களும் பெண்களும்தான். குறிப்பாக, ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பெண்கள் முதல் பலியாகிறார்கள். அதன் இன்னொரு பகுதியாகப் பாலியல் வற்புறுத்தல்களுக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தப்படுவது போன்ற பாலியல் கொடுமைகளும் நடக்கின்றன. ஆகவே, பெண்களின் பிரச்சனை என்பது பாலினம் சார்ந்தது மட்டுமல்ல, அதுவர்க்கம் சார்ந்ததாகவும் இருக்கிறது.

முதலாளித்துவ நெருக்கடியின் தலைமைப் பீடத்தில் இருக்கும் அமெரிக்க அரசு நுட்பமானதொரு மூன்றாம் உலகப்போரைத் தொழிலாளர்கள் மீது தொடுத்திருக்கிறது. லிபியா, எகிப்து, சிரியா, ரஷ்யா, ஆப்பிரிக்க நாடுகள் என எங்கும் இந்த யுத்தத்தின் தாக்கத்தைக் காணமுடியும். அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் வருகிறது என்றால், அதிலிருந்து உலகத்தின் கவனத்தை மாற்றவும் முதலாளித்துவ நெருக்கடி பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. நெருக்கடியை சமாளிக்க உலக முதலாளித்துவம் புதிய வள ஆதாரங்களைத் தேடுகிறது. அதற்காகப் போர்ச் சூழல்களும் போர்ப்பதற்றங்களும் உருவாக்கப்படுகின்றன. ஈரான் இதற்கொரு சாட்சி. நைஜீரியாவில் ஏற்படுத்தப்படும் நெருக்கடிக்கான காரணமாக அந்நாட்டின் பெட்ரோலிய எண்ணெய் வளம் இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமிக்க நாடு நைஜீரியா.

உலகின் எந்தப்போரும் தொழிலாளர் நலன்களைக் காப்பதற்காக நடைபெற்றதில்லை. வளங்களைக் கைப்பற்றுவதற்காகவே உலகப்போர்கள் தொடுக்கப்பட்டன. இப்போதும் போர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அமெரிக்காவின் இந்தப் போர்ப்பசியைத் தடுக்கிற ஆற்றல் உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்குத்தான் இருக்கிறது என்றார் மக்வாய்பா. மாநாடு பற்றிக் குறிப்பிட்ட அவர், இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் பல்வேறு கோணங்களில் ஆராயப்படுவதும், பிரதிநிதிகளாகப் பெண்கள் கணிசமான அளவுக்குப் பங்கேற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கவை என்றார். 

செய்தியாளர் செந்திப்பில் கலந்து கொண்டு பதிலளித்த சிஐடியு துணைத் தலைவரும், டபிள்யூ.எப்.டி.யு. துணைப் பொதுச்செயலாளருமான சுவதேஷ் தேவ்ராய், அடிப்படையான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதற்கு மதவாத அரசியல் பயன்படுத்தப்படுவது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் நடக்கிறது என்றார். முதலாளித்துவம் தனது நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமானால் அதற்கான முதல் நிபந்தனையாக நாடுகளில் காட்டுமிராண்டித்தனமான ஆட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.  செய்தியாளர்கள் சந்திப்பில் சிஐடியு அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநில துணைப்பொதுச் செயலாளர் க.திருச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

;