tamilnadu

img

சிறு குறு தொழில்கள் மூடலா? ஸ்டாலினுக்கு முதல்வர் விளக்கம்

சென்னை,மார்ச் 19- தமிழகத்தில் சிறுதொழில்கள் எதுவும் மூடப்படவில்லை. சிறுதொழில்கள் எல்லாம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். தமிழக சட்டப்பேரவையில் வியாழனன்று (மார்ச்19) கேள்வி நேரம் முடிந்தவுடன் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், “கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் பதற்றத்தில் உள்ளது. பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் தொழில்களுக்கான மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளன. தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதால் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு உள்ளது. வெளிநாடுகளைப் போன்று தமிழக அரசும் சலுகைகளை அறிவிக்க வேண்டும்” என்றார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சிறுதொழில்கள் எதுவும் மூடப்படவில்லை. முன்னெச்சரிக்கையாக தொழிலாளர் நலத்துறை செயலாளரும், தொழில்துறை செயலாளரும் தகுந்த எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, எந்தவித அச்சமும் படத்தேவை யில்லை”என்றார். இத்தாலி போன்ற வெளி நாடுகளில் இரண்டு மாதத்திற்கு முன்பே பாதிப்பு வந்தது. நமக்கு பாதிப்பு பெரிய அளவுக்கு இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் முழுமூச்சுடன் எடுக்கப்பட்டு வருகிறது”என்றார்.

;