tamilnadu

img

ஜன.8 பொது வேலைநிறுத்தம் தொழிலாளர் வர்க்கத்துடன் கரம் கோர்த்து நிற்போம்... அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 12ஆவது தேசிய மாநாடு அறைகூவல்

மும்பை:
தேசம் காக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் மகத்தான ஜனவரி 8 பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்திடும் விதத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முழு ஆதரவுடன் களத்தில் நிற்கும் என்று சங்கத்தின் அகில இந்திய மாநாடு சூளுரைத்துள்ளது. 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 12ஆவது தேசிய மாநாடு மும்பையில் டிசம்பர் 27 அன்று தொடங்கி 30 அன்று, பாஜக கூட்டணியின் எதேச்சதிகார ஆட்சிஅமல்படுத்தும் நவீன தாராளமயக் கொள்கைகள் சாமானிய மக்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதற்கு எதிராக அனைத்துப் பிரிவு மகளிரையும் அணிதிரட்டும் உறுதியோடு நிறைவு அடைந்தது.மேலும் மாநாட்டில், மோடி அரசாங்கத்தால் மனு(அ)நீதி சித்தாந்தத்தின்கீழ் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்துத்துவா மதவெறித் தாக்குதலை உறுதியாக எதிர்த்திடவும் உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது.மத்திய பாஜக ஆட்சியின் படுபிற்போக்குத்தனமான மற்றும் பெண்களுக்கு எதிரான மனோபாவத்தால் சிறுபான்மை, தலித், பழங்குடியினப் பெண்கள் மிகவும் மோசமான தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மேலும் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் நாட்டில் பொருளாதார ரீதியாகவும், பாலின ரீதியாகவும் இடைவெளி அதிகமாகியுள்ளது.  பெண்கள் வேலை செய்வதற்கான உரிமையும், வாழ்வாதாரங்களும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. வேலை பார்க்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதும்மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் ஆட்சியாளர்கள், மக்கள் நல அரசு என்பதைக் கைகழுவிவிட்டு, பொது சுகாதாரம், கல்வி முதலானவற்றைத் தனியாரிடம்தாரைவார்த்திட நடவடிக்கைகள் எடுத்திருப்பதன் விளைவாக நாட்டின் சமூகக் கட்டமைப்பில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு, பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். 

இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்குக் கூட மிகக் கடுமையானமுறையில் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தாலும், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றாலும் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிராக மூர்க்கத்தனமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் எதிராக நாட்டிலுள்ள பெண்களை அணிதிரட்டிட மாநாடு உறுதி பூண்டுள்ளது.இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, மாநாடு தன் கிளைகளுக்குக் கீழ்க்கண்ட
வாறு அறைகூவல் விடுத்துள்ளது:

1. மனு(அ)நீதி அடிப்படையிலும் இந்துத்துவா மதவெறி அடிப்படையிலும் பெண்களுக்கு எதிராகக்கட்ட விழ்த்துவிட்டுள்ள ஆட்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராகப் போராட, தனித்தும், கூட்டாகவும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

2.    2020 ஜனவரி 8 அன்று நடைபெறும் தொழிலாளர் வர்க்கத்தின் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் மிகப்பெரிய அளவில் பங்கேற்றிட வேண்டும். குறிப்பாக முறைசாராத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களை அணிதிரட்டிட கவனம் செலுத்த வேண்டும்.

3.    விவசாயப் பெண்களுக்கு நில உரிமை கிடைத்திடுவதற்கான போராட்டங்களை உக்கிரப்படுத்திட வேண்டும். குறிப்பாக வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்திட மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்டங்களை வலுப்படுத்திட வேண்டும்.

4. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக்குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சுயேச்சையாகவும் இதர அமைப்புகளுடன் இணைந்தும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

5. சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ள முஸ்லிம்,பழங்குடியின மற்றும் தலித் பெண்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொண்டு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

6. இளம்பெண்கள், தங்கள் வாழ்க்கைத்துணையைத் தெரிவு செய்துகொள்வதற்கான வகைசெய்யும் விதத்திலும், அவர்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கை அமையக்கூடிய விதத்திலும் அவர்களிடையே பணிகளை வலுப்படுத்திட வேண்டும். 

நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டின் நிறைவில், 101 உறுப்பினர்களுடன் புதிய மத்திய நிர்வாகக் குழுவும், 30 பேர் கொண்ட செயற்குழுவும், மாலினிபட்டாச்சார்யா அகில இந்தியத் தலைவராகவும், மரியம் தாவ்லே பொதுச் செயலாளராகவும், எஸ். புண்ணியவதி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டு மாநாடு நிறைவு பெற்றது.சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர்களாக சுபாஷினி அலி, பி.கே.ஸ்ரீமதி, ரமாதாஸ், சுதா சுந்தரராமன், அஞ்சு கர், சூசன்கோடி, உ.வாசுகி, கீர்த்தி சிங், பி.கே.ஷைனபா, ராம்பாரி, சி.எஸ்.சுஜாதா, டிபோலினா ஹேம்ப்ராம், ரமணி தேப்வர்மா, ஜக்மதி சங்வான் ஆகியோரும், செயலாளர்களாக கிருஷ்ண ரக்சித், கனனிகா போஸ், ஜர்னா தாஸ், பி.சதீ தேவி, தபசி பிரஹராஜ், ரமா தேவி, ஆஷா சர்மா, பி.சுகந்தி ஆகியோரும் துணைச் செயலாளர்களாக கவுரம்மா, நியோதி பர்மன், பி. சுகன்யா, மது கார்க், மல்லு லட்சுமி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து மாதர் சங்க மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர்களாக என்.அமிர்தம், எஸ்.வாலண்டினா, வி.பிரமிளா, எஸ்.கே.பொன்னுத்தாய், ஏ.ராதிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. (ந.நி.)
 

;