tamilnadu

img

மேகம் ஏன் ஓடுது?

நீண்ட நாட்களாகவே எல்லி யானைக் குட்டிக்கு ஒரு சந்தேகம். அந்த சந்தேகத்தைத்தன் அம்மாவிடம் கேட்கலாம் என்று “அம்மா அம்மா” என்று அழைத்தபடியே அம்மா இருக்கும் இடத்திற்குச் சென்றது எல்லி யானைக் குட்டி. “அம்மா எனக்கு ஒரு சந்தேகம்?” என்று கேட்டது எல்லி. “என்ன சந்தேகம்?” “அதுவா, ஏன் மேகங்கள் எல்லாம் வானத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றன?” “தெரியவில்லையே கண்ணா. அதானே ஏன் ஓடிக் கொண்டிருக்கின்றன. என்று எல்லியின் அம்மா மேகத்தைப் பார்த்தபடியே, முன்பெல்லாம் இப்படி ஓடவில்லையே. இதையெல்லாம் கவனிக்கிறாயா நீ? சமத்து டா கண்ணா நீ!” “என்னது முன்பெல்லாம் ஓடவில்லையா? பிறகு!” என்று கேட்டது எல்லி. “நாமெல்லாம் நடந்து போவோமே அது போல் தான் கொஞ்சம் மெதுவாகச் சென்றன. எனக்கு சரியாகத் தெரியவில்லை. அப்பாவிடம் சென்று கேட்டுக்கொள் கண்ணா” என்று கூறி அங்கிருந்த மர கிளைகளை ஒடித்துச் சாப்பிட ஆரம்பித்தது. உடனே தன் அப்பாவிடம் சென்ற எல்லி “அப்பா எனக்கு ஒரு சந்தேகம்?” என்று அப்பாவைப் பார்த்துக் கேட்டது எல்லி. “என்ன சந்தேகம்?” “ஏன் மேகங்கள் எல்லாம் வானத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றன?” எல்லியின் அப்பா சிறிது நேரம் யோசித்து விட்டு “தெரியலையே எல்லி கண்ணா. நானே இப்பொழுதுதான் கவனிக்கின்றேன். மேகங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. எதற்கும் நீ பாட்டியிடம் கேட்டு விடு” என்று கூறிவிட்டு தப்பித்தோமடா சாமி எல்லியிடம் மாட்டினால் கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்து எடுத்து விடுவான் என்று நினைத்தவாறே மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது எல்லியின் அப்பா. உடனே தன் பாட்டி இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றது எல்லி. “பாட்டி ஏன் மேகங்கள் எல்லாம் வானத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றன?” என்று பாட்டியிடம் கேட்டது எல்லி. அடடா என்னோட அறிவுக் கண்ணா! எல்லி கண்ணா! வாடா! தங்கம் வா! என்று தனது தும்பிக்கையால் முதுகை தடவிக் கொண்டே “யாருமே என்கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டதில்லை.

ஆனால் நானும் இதைச் சின்ன வயதில் கவனித்து இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் மேகங்கள் இவ்வளவு வேகமாக ஓடியதில்லையே! நீ சொன்ன பிறகுதான் நானும் கவனிக்கிறேன். ஏன் இவ்வளவு வேகமாக மேகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன? சரி வா இந்த காட்டில் வேறு யாராவதிடம் கேட்போம்” என்று கூறி இரண்டும் நடக்க ஆரம்பித்தன. வழியில் முயல் ஒன்றைப் பார்த்தன.  “முயல் அக்கா முயல் அக்கா! மேகம் ஏன் ஓடுது?  மேகம் ஏன் ஓடுது?” என்று எல்லி முயலைப் பார்த்துக் கேட்டது. “நான் என்னத்தக் கண்டேன்!நான் என்னத்தக் கண்டேன்!” என்று கூறி அந்த இடத்தை விட்டு வெகு வேகமாக ஓடியது முயல். எல்லியும் பாட்டியும் மறுபடியும் நடக்க ஆரம்பித்தன. எதிரில் பட்டாம்பூச்சி ஒன்று பறந்து வந்தது. “பட்டுப் பட்டுப் பாப்பா! பட்டாம்பூச்சி பாப்பா! மேகம் ஏன் ஓடுது? மேகம் ஏன் ஓடுது?”  என்று கேட்டது எல்லி. நான் என்னத்தக் கண்டேன்!நான் என்னத்தக் கண்டேன்! என்று கூறி தனது அழகான மஞ்சள் நிற இறக்கைகளை விரித்து மேகத்தை அதிசயமாகப் பார்த்தபடியே பறந்து சென்றது பட்டாம்பூச்சி. எல்லியும் பாட்டியும் மீண்டும் நடக்க ஆரம்பித்தன. எதிரில் ஒரு பஞ்சவர்ணக்கிளி ஒன்று பறந்து வந்தது “கண்ணப்பரிக்கும் வண்ணக்கிளியே!  பஞ்ச வர்ணக் கிளியே! மேகம் ஏன் ஓடுது! மேகம் ஏன் ஓடுது!” என்று கேட்டது எல்லி. “நான் என்னத்தக் கண்டேன்! நான் என்னத்தக் கண்டேன்!” என்று கூறி தனது அழகான வண்ண இறக்கைகளை விரித்து மேகத்தை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. “பாட்டி யாருக்குமே தெரியல பாட்டி. இனி யாருகிட்ட நாம கேட்கலாம்?” என்று சோகமாக பாட்டியிடம் கேட்டது எல்லி.

அப்பொழுது எப்பொழுதுமே இலைகள் கொடுக்கும் ஆலமரத்திற்கு அருகில் வந்தன. ஆலமரத்தைப் பார்த்தது. வா நாம் நமக்கு தினமும் உணவு தரும் ஆலமரத்திடமே கேட்போம். அதுதான் மிகவும் வயதான மரம் என்று கூறிக் கொண்டே இருவரும் ஆலமரத்தின் அடியில் சென்று ஆலமரத்தைப் பார்த்தார்கள். “ஆலமரப் பாட்டி! ஆலமரப் பாட்டி! எங்க பசி போக்கும் ஆலமரப் பாட்டி! மேகம் ஏன் ஓடுது! மேகம் ஏன் ஓடுது!” என்று கேட்டது எல்லி. “அடடா! இந்தச் சின்ன எல்லிக்கு இவ்வளவு பெரிய கேள்வியா! அது ஒரு பெரிய கதையாச்சே” என்றது ஆலமரம். “கதையா சொல்லுங்க பாட்டி. எனக்குக் கதை ரொம்பப் பிடிக்கும். பாட்டி கூட எனக்கு தினமும் கதை சொல்லுவாங்க” என்று கூறியது எல்லி. “மேகங்கள் நீராவியத் தேடி ஓடுது” “நீராவியா அப்படின்னா?” “கடல் ஏரி குளம் குட்டையில் இருக்கிற நீர் எல்லாம் மேல ஆவியாகி போகும். அதுதான் நீராவி” “ஓஹோ! அப்படியா! எதுக்கு நீராவியைத் தேடி ஓடுது?” “நீராவியோட மேகம் சேரும்போது கார்மேகமா மாறும்.அந்தக் கார்மேகத்தில் குளிர்ந்த காற்றுப்பட்டால் மழை வரும்” “இதுக்குத்தான் மேகங்கள் எல்லாம் ஓடிட்டு இருக்கா! ஆலமரப் பாட்டி?” “ஆமாம், இப்பெல்லாம் குளம் குட்டை ஆறு ஏரி எல்லாம் எங்க இருக்குது?” “இல்லையா பாட்டி?” இருக்குதா குட்டீஸ்???

;