tamilnadu

img

தம்பியுடையாள் படைக்கஞ்சாள்... கணேஷ்

அங்கிள்... எப்புடி இருக்கீங்க... என்ன அங்கயே பாத்துக்கிட்டு இருக்கீங்க..
அந்தக் குட்டிப் பொண்ணப் பாரு.. பைக்கப் பிடிச்சுக்கிட்டு, ஏதோ அத மைக்கா நினைச்சுக்கிட்டு மைக் டெஸ்டிங் 1,2,3னு சொல்லிட்டு இருக்கு..
ஆமா... ஆனா, இந்த 1,2,3 சொல்றதெல்லாம் உங்க காலம்.. நாங்களாம் இப்போ தட்டிப் பாத்துக்குறோம்.. அவவளவுதான்..
நீங்க புத்திசாலியாச்சே..
ஆமா, அங்கிள்... நீங்க முன்னாடியே சொல்லிருக்கீங்க.. உங்க தலைமுறைய விட எங்க தலைமுறை புத்திசாலினு... ஆனா என்ன கிடைக்குது... போட்டி எனக்கும், உங்களுக்குமா நடக்குது... எங்க தலைமுறைக்குள்ளதான நடக்குது..
ஆமா.. உங்க தலைமுறைக்கு வேண்டிய புத்திசாலித்தனம் உங்கிட்ட இருக்கானு டெஸ்ட் பண்ணுவாங்க.. உங்க வளர்ச்சி அபாரம்தான்..
வளர்ச்சி இல்ல அங்கிள்.. முன்னேற்றம்.. 
ரெண்டுக்கும் என்ன வேறுபாடு.
அந்தக் குட்டிப் பொண்ணு 15 வருஷத்துக்கு அப்புறம் எப்புடி இருப்பா?
உன்னை மாதிரி இருப்பா..? நல்லா வளர்ந்துருப்பா.. வளர்ச்சிதானே..
ஆமா.. வளர்ச்சிதான்.. அது தானா நடக்கும்... படிப்புல,, உடல் நலன்ல, விளையாட்டுல எப்புடி இருப்பா... என் வயசுல பேட்மிண்டன் சாம்பியனா அந்தக் குட்டிப் பொண்ணு ஆனா எப்புடியிருக்கும்..? அதுதான் முன்னேற்ம்..
புரியுது.. புரியுது... பொருளதாரத்தப் பத்தி பேசுறப்ப கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருகிடுச்சு, மொத்த வருமானம், சராசரி வருமானம்னுதான நிபுணர்கள்லாம் பேசுவாங்க.. இடதுசாரின்னு சொல்வறவங்கதான் தனிநபர் வருமானம், கல்வியறிவு, வேலைவாய்ப்பு, சுகாதாரம்னு முன்வைப்பாங்க..
அதுல அங்கிள்... ஏன் அவங்க பேசுறாங்கன்னா, முன்னேற்றம்னா அதுல அரசுத் தலையீடு இருக்கனும்.. அதனாலதான்.. நேத்து எங்க வகுப்புல இதுதான்... பொருளாதாரம்னா நிதிசார்ந்தது மட்டும்தான்னு நாங்க நெனச்சுட்டு இருந்தோம்... நேத்து வகுப்புலதான் கல்வி, சுகாதாரம் எல்லாம் இருக்குற மனித வள மேம்பாடு பொருளியல்ல அடங்கும்னு தெரிஞ்சுது..
பரவாயில்ல... உங்க பாடங்கள்ல அதெல்லாம் பள்ளிக்கூடத்துலயே சேத்துட்டாங்க... நாங்க படிக்குறப்ப சமூக அறிவியல்ல வரலாறும், புவியியலும் மட்டும்தான்... இப்பலாம் ஆறாம் வகுப்புலயே பொருளியல் வந்துருது..
அங்கிள்... பொருளியல் சிந்தனைலாம் வந்து 2,500 வருஷம் ஆச்சு... ஆனா, கோட்பாடுகளாகவும், சூத்திரங்களாவும் வர லேட்டாச்சு.. Economicsங்குற வார்த்தை கிரேக்க வார்த்தையான Oikosங்குற வார்த்தைலருந்துதான் வந்துச்சு..
அப்படினா என்ன?
Oikosனா வீட்டு நிர்வாகம்.. House Management.. வீட்டு நிர்வாகம்னா பணத்தோட கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலன்னு எல்லாமே வந்துருதுல.. 
ஆமால்ல... தொடக்கமே தெளிவாத்தான் இருந்துருக்கு.. பொருளியல்ல முதல் புத்தகமே நாடுகளின் செல்வம் (Wealth of Nations).. செல்வம்குறத வெறும் பணமா நெனச்சுட்டோமோ..?
அந்தப் புத்தகம்தான் பொருளியல் துறையில் முதல் நூல்.. ஆடம் ஸ்மித் எழுதுனது.. அவரத்தான் பொருளியலின் தந்தைனு சொல்றோம்.. செல்வம் என்பது ஆண்களுக்கானதுனு மாறுனதுதான் உலகத்துல நடந்த மிகப்பெரிய அக்கிரமம், அங்கிள்..
வேட்டையாடுவதற்கு ஆண்களும், வீட்டைப் பார்த்துக் கொள்ள பெண்களும் என்ற தவறான வேலைப்பிரிவினைதான் தொடக்கப்புள்ளி..
இருந்தாலும் நாகரீக உலகம் அத மாத்திருக்கனுமே.. ஜப்பான்ல இன்னும் கூட பெண்கள் திருமணத்துக்குப் பிறகு பிறந்த குடும்பப் பெயரை தனது பேருக்குப் பின்னாடி சேத்துக்கக்கூடாதாம்..
அப்புடியா... நம்ம ஊர்ல பிரியங்கா காந்தி வதேரான்னு ரெண்டு குடும்பத்துப் பெயரையும் போட்டுக்குற மாதிரி செய்ய வேண்டியதுதான..
அங்க முடியாது... குடும்பப் பெயரைத் தக்க வெச்சுக்க போராடிக்கிட்டு இருக்காங்க.. போன வாரம் கூட நாடாளுமன்றத்துல கம்யூனிஸ்ட் கட்சியோட பெண் உறுப்பினர் பிரதமர் முன்னாடி போய் நின்னு அனுமதிக்கப் போறீங்களா, இல்லையானு சத்தம் போட்டுருக்கார்.. அந்த ஆளு இன்னும் அசையல..
ஆமா நானும் படிச்சேன்... தம்பிகளும், அண்ணன்களும் கூட குரல் எழுப்புறாங்களாமே.. தம்பியுடையாள் படைக்கஞ்சாள்னு சொல்ற அளவுக்கு நிலைமை இருக்கு.. 
எல்லா சமூகப் பிரச்சனைகள்லயும் குரல்கள் வலுவா எழும்பனும்... கள்ளச்சாராயத்த ஒழிக்கனும்னு குரல் வந்தமாதிரி, கள்ளச் சாமியார்கள ஒழிக்கனும் குரல் வரணுமே..
ஹாத்ரஸ்ல நடந்ததச் சொல்றீங்களா.. என்றவாறே நகர்ந்தாள்.