tamilnadu

அதிமுக அரசின் ஆயுள் ரேகையும் போலியானதுதான்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஏ.கே.போஸ் வேட்பு மனுவில் இடம் பெற்றிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்றும் அவரது வெற்றி செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக சார்பில் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சீனிவேல் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் திமுக

சார்பில் நிறுத்தப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை மருத்துவர் பாலாஜி முன்னிலையில், பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கைரேகையின் நம்பகத்தன்மை குறித்து திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் தரப்பில், அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை நிராகரித்துவிட்டது. இப்போது கைரேகை போலியானது என நீதிமன்றம் கூறிவிட்டது. இதில் விசித்திரம் என்னவென்றால், ரேகைக்கு உரியவராக கூறப்பட்ட ஜெயலலிதாவும் இப்போது இல்லை, போலி ரேகை மூலம் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.கே. போஸூம் இப்போது உயிருடன் இல்லை. அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டபோதும்- வழக்கு நிலுவையில் இருந்தாலும் தேர்தல் நடத்தலாம் என்றபோதும்- திருப்பரங்குன்

றம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை. ஜெயலலிதாவின் கைரேகை மட்டுமல்ல, இப்போதைய அதிமுக அரசின் ஆயுள் ரேகையே போலியானதுதான். ஆளுநர், சபாநாயகர், தேர்தல் ஆணையம், மத்தியில் உள்ள மோடி அரசு என அனைத்தும் சேர்ந்து முட்டுக் கொடுப்பதால்தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கொறடா உத்தரவை மீறி அதிமுக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களித்த தர்மயுத்தம் புகழ் ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே போவதாலும், தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சபாநாயகரின் தீர்ப்பு நியாயப்படுத்தப்பட்டதாலும், இந்த அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது. சசிகலா சிறைக்குச் சென்றதைத் தொடர்ந்து இருதரப்பாக பிரிந்து கிடந்த ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புகளை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் கையைப் பிடித்து இணைத்து வைத்து ஒட்டுப்போட்டு, கட்டுப்போட்டு வைத்தார். 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம் 3 தொகுதிகளுக்கு மட்டும் நிறுத்தி வைத்திருப்பதன் மர்மம் விளங்கவில்லை. ஒருமுறை ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறி திருப்பரங்குன்றம் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால். அதன்பிறகுதான், கஜா புயலால் கலங்கி தவித்த திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு , பின்னர் அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் கைரேகையை மாற்றி மோசடி செய்தவர்கள்தான் இப்போது மோடியுடன் சேர்ந்துமோசடியில் எல்லைப்பரப்பை விஸ்தரித்திருக்கிறார்கள். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மோடி அரசுக்கு முடிவு கட்டப் போவது மட்டுமல்ல, தமிழக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது நிச்சயம். - மதுக்கூர் இராமலிங்கம்

;