தூத்துக்குடி, ஜூன் 2-கோவில்பட்டியில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி தெற்கு பஜாரில் இருந்து மாதாங்கோவில் செல்லும் சாலை மிகவும் பிரதான சாலை ஆகும்.செண்பகவல்லியம்மன் கோவில், கடலைக்கார தெரு, தெப்பக்குள தெரு, கோர்ட்டு, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இந்தசாலையின் வழியாகத்தான் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்தசாலையில் மாதாங்கோவில் இணைப்புபகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் காங்கிரீட் பாலம் கடந்த ஒரு மாதத் துக்கு முன்பு சேதமடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகரசபை அலுவலகத்துக்கு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்தனர். இதுவரை சேதமடைந்த பாலத்தைஅதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கைஎடுக்கவில்லை. இதனை கண்டித்து, சனிக்கிழமை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நகர செயலாளர் முருகன் தலைமையில், சேதமடைந்த பாலத்துக்கு தேங்காய், பழம் வைத்து,ஊதுபத்தி கொளுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலத்தை உடனடியாக சரி செய்ய கோரியும், நகரசபை நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில செயலாளர் முத்துக்காந்தாரி, கட்டுமான சங்க நிர்வாகிகள்அந்தோணி செல்வம், தெய்வேந்திரன்,ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த நகரசபை பொறியாளர் கோவிந்தராஜன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் திங்கட்கிழமை பாலத்தை சரி செய்யும் பணியை தொடங்கி, விரைவில் பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்தார்.