tamilnadu

img

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் ஜவுளி விற்பனை மந்தம்....

மதுரை:
மதுரை மாநகராட்சி மேற்கொண்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் தீபாவளி விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. கொரோனா பரவல் ஒருபுறம் விற்பனையில் தாக்கத்தை ஏற் படுத்தியிருந்தாலும், ஸ்மார்ட் சிட்டி பணிகள் 50 சதவீத வியாபாரத்தை முடக்கிவிட்டது என்கின்றனர் ஜவுளி வியாபாரிகள்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரைநகரில் ரூ.1,100 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடக்கிறது.. நடக்கிறது.. நடந்துகொண்டயிருக்கிறது... இன்னும்தொடரும்...அந்தளவிற்கு சுறுசுறுப்பாக இயங்குகிறது மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும்.தீபாவளிப்பண்டிகைக்கு மதுரை மாவட்ட மக்கள் மட்டுமல்ல விருதுநகர்,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர் களும் ஜவுளிகள் வாங்குவதற்கு மதுரைக்கு வருவதை இன்றைக்கும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்தாண்டு மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் மழைநீர் சேகரிப்பு வடிகால், கழிவுநீர் வடிகால், தரை வழி கேபிள்   உள்ளிட்ட பணிகளுக்காக மாசி வீதிகள் முழுவதும் தோண்டப்பட்டுள்ளன. நான்கு சித்திரை வீதிகளிலும் கருங்கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.  புதுமண்டபம்,  எழுகடல் தெரு, அம்மன்சந்நிதி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் கோவில் மாநகரம் குண்டும்-குழியுமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.தெற்குமாசி வீதி, விளக்குத்தூண், மஹால் பகுதிகள், ஜடாமுனி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகள் நகரின் “ஜவுளி பஜார்” என்றழைக்கப்படுகிறது. இப்பகுதிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் ஜவுளிக் கடைகள், ஆயத்த ஆடைகள் விற்பனைக்கடைகள் உள்ளன. மதுரையிலிருந்து வெளி மாவட்டங்களுக் கும் ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருகின்றது. 

தீபாவளிப் பண்டிகை  மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் வந்துஜவுளி எடுத்துச் செல்வது வழக்கம்.ஒரே மாதத்தில் பலகோடி ரூபாய்களுக்கு மதுரையில் ஜவுளி வர்த்தகம்நடைபெறும். கொரோனா பாதிப்பால்கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து ஜவுளிக்கடைகள் அனைத்தும் மூடப் பட்டன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. தீபாவளிவிற்பனையை பெரிதும் எதிர்பார்த்திருந்து காத்திருந்த வியாபாரிகள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர்.  தீபாவளி விற்பனை குறித்து கேட்டபோது  ஜவுளிக்கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறியதாவது:- 

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீள தீபாவளி விற்பனை பெரிதும் கைகொடுக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளால் விற்பனை மிகக் குறைவாக உள்ளது. தெற்குமாசி வீதி மட்டுமின்றி ஜவுளிக்கடைகள் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் தோண்டப்பட்டு மிகமோசமாக உள்ளது. சாலைகளில் நடப்பதற்கு கூட இடமில்லை. கழிவுநீர் ஆங்காங்கே தேங்கிநிற்கிறது. ஜவுளி எடுக்கவருபவர்களின் இரு சக்கர வாகனங்கள், கார்களை நிறுத்துவதற்கு எங்கும் இடம் இல்லை.  சாலைகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங் களுக்கும் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டுள்ளதால் கார்களில் வருவதற்கு பலரும் தயங்குகின்றனர். இதுபோன்ற காரணங்களால் தெற்குமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் ஜவுளி எடுக்க வருவதுகுறைந்துவிட்டது. மதுரை நகரில் வளர்ந்து வரும் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மக்கள் செல்கின்றனர். மேலூர், வாடிப்பட்டி, யா.ஒத்தக் கடை, திருமங்கலம் உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில் மக்கள் அங்கேயே ஜவுளிகளை எடுத்துச் செல்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஜவுளி வியாபாரத்தை படுக்கப் போட்டுவிட்டது என்றனர்.