tamilnadu

img

ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை மையம் அமைத்திடுக... மதுரையில் தொற்றுக்குள்ளான மக்களுக்கு உரிய சிகிச்சையை உத்தரவாதப்படுத்துக....

மதுரை:
மதுரை மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சந்திரமோகனை, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்  ஜூன் 24 புதனன்று காலை நேரில் சந்தித்து, மதுரையில்கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய15 நடவடிக்கைகளைப் பற்றி எழுத்துப்பூர்வமானமனுவினை அளித்தார். இந்த நடவடிக்கைகளை நிறைவேற்ற தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக ஒரு கோடி ரூபாய் வழங்கதயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சந்திரமோகனிடம் சு.வெங்கடேசன் எம்.பி. அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:மதுரை மாவட்டத்தில் பெருகிவரும் கொரோனா தொற்றினைத் தடுத்திடவும்  தொற்றுக்குள்ளான மக்களுக்குச் சிறந்த, உரிய சிகிச்சையை உத்தரவாதப்படுத்தவும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்துக!
    1. ஒரு வட்டாரத்துக்கு (BLOCK) 2 ஆர்பிஎஸ்கே (RBSK) வண்டிகளும் ஒரு எம்எம்யுவும்  (MMU) தற்பொழுது உள்ளன.ஒவ்வொரு  வண்டியிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் உள்ளனர். இவர்களைக் கொண்டு ஒருநாளைக்கு ஒரு முகாம் வீதம் 39 (13 X 3முகாம்) காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தவேண்டும். இந்தக் குழுக்களை எக்காரணங்கொண்டும் வேறு பணிகளுக்கு அனுப்பக்கூடாது. 

    2. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களை, காலை 11 மணிக்குப் பிறகு அவர்களின்  பி.எச்.சி (PHC) க்கு அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கான வாகனம் உள்ளிட்ட இதர ஏற்பாடுகளை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.   

   3.இவ்வாறு ஒவ்வொரு நாளும் 100 முகாம்கள்நடந்தால், சுமார் 7500 நபர்களை அவர்கள்இடத்திற்கே சென்று முகாம்களில் சந்திப்பதன் மூலம் காய்ச்சலும் கொரோனாஅறிகுறிகளும் இருப்பவர்களை நிறையக் கண்டறியலாம். அவ்வாறு கண்டறியப்படுபவர்களுக்கு முகாம்களிலேயே கொரோனா சளி மாதிரி (swab) எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். 

    4.இம்முகாம்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச்(சாமியானா, இருக்கைகள் உள்ளிட்டவை)  செய்வதற்கு ஆகும் தொகையை - மதுரை நாடாளுமன்ற தொகுதிகளுக்குள் நடக்கும் அத்தனை முகாம்களுக்கும் ஆகும் தொகையை - எனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தருவதற்கு நான் தயாராக உள்ளேன். 

    5. இம்முகாம்களில் மருத்துவர்கள் கண்டறிந்து கொரோனா சளி மாதிரிகள் எடுக்கப்பட்டவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எக்காரணங்கொண்டும் சீலிடக்கூடாது. அந்த நபரின் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீட்டிலிருந்து அவர் வெளியே வராதவாறு உறுதிசெய்ய வேண்டும். 

    6.முகாம்களைத் தவிர மக்கள் தொகை அடர்த்தி அதிகம் இருக்கும் பகுதியில் COVID RISK ASSESSMENT கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் கண்டறியப்படும் நபர்கள் கோவிட் சுகாதாரமையத்துக்கோ, கோவிட் மருத்துவமனைக்கோ கொண்டுசெல்லப்பட வேண்டும். 

    7.வெளிமாவட்டத்திலிருந்தோ, வெளிமாநி லத்திலிருந்தோ வருகிறவர்களுக்கு மாவட்ட எல்லையிலே கொரோனா சளி சோதனை செய்யப்பட வேண்டும். சோதனைமுடிவுகள் வரும்வரை, (ஒரு நாளுக்குள் முடிவுகள் வருவதை உறுதிப்படுத்த வேண்டும்) நிர்வாகம் ஏற்பாடு செய்யும் இடத்திலோ அவரது செலவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் இடத்திலோ அவர்களைத் தங்கவைக்க வேண்டும். 

    8.அறிகுறிகளற்ற கோவிட் நோயினரை (asymptomatic positive) பாதுகாப்பாய் பராமரிக்க ஆயிரம்  படுக்கை வசதிகள் கொண்ட Facility Quarantine அமைக்க வேண்டும். 

    9. அறிகுறிகளற்ற துணைநோய் உடைய கோவிட் நோயருக்கு (asymptomatic posited with comorbidities) முழு மருத்துவ அவசர மேல்சிகிச்சைக்கு தயார்நிலையில் தனி தடுப்பு ஒதுக்க வசதி கொண்ட படுக்கைகளை குறைந்தபட்சம் 500 எண்ணிக்கையிலாவது ஏற்படுத்த வேண்டும். 

    10.Co morbidity உள்ள வயோதிக மக்களைக்கண்காணித்து பராமரிக்க தனி NCD cell for CoVID மதுரையில் அமைக்கப்பட வேண்டும். 

    11. அறிகுறியுடன் இருக்கும் கோவிட் நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 

ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை மையம் 
    12. மதுரையில் கோவிட் நோய்க்கான ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும். சென்னையிலும் தமிழகமெங்கும் ஆங்காங்கே நடந்த/நடைபெறும் சித்த மருத்துவக் கூட்டுச் சிகிச்சையின் பயன் இப்போது அறிவியல் உலகில் நம்பிக்கை அளிப்பதாக வந்து கொண்டிருக்கின்றது. மதுரையிலும் சித்தாவுடன் ஓமியோபதியும் சேர்த்து ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை மையம் வருவது கோவிட் நோயை கட்டுக்குள் கொண்டுவர பேருதவியாய் இருக்கும். 

    13.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மிக விலையுயர்ந்த மாத்திரைகளான 1.TACROLIMUS, 2.MYCOPHENOLATE, 3.CYCLOSPRIN ஆகியவை தினமும் சாப்பிடவேண்டும். இந்த மாத்திரைகளை நமது ராஜாஜி மருத்துவமனையில் அவர்களுக்கு விலையில்லாமல் தரப்படுகிறது.  மதுரையில்  சுமார் 80 முதல் 100 நோயாளிகள் இப்படிபயன்பெறுகிறார்கள். சிறுநீரக மாற்றுஅறுவை சிகிச்சை செய்துகொண்டவர் களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிகமிகக் குறைவு. அவர்கள் ஒரு இறுதிச்சடங்கில்கூட கலந்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுபவர்கள். கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்தக்காலத்தில் அரசு மருத்துவமனையின் பெருங்கூட்டத்துக்குள் வந்துஅவர்களை வாங்கிச்செல்லச் சொல்வது பாதுகாப்பானது அல்ல. எனவே அவர்களுக்கு வேறு ஒரு இடத்தை அறிவித்து, மாதமாதம் அங்கு வந்து வாங்கிச்செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். 

    14.நாள்தோறும் 3 ஆயிரம் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகள் நடை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    15.மதுரை, கொரோனா வார்டில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்கு அதிகரிக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழுவெற்றியடைய மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நல்ல முயற்சிக்கும் உடன்நிற்கும் அதேநேரத்தில், ஏற்கனவே எனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு இராஜாஜி மருத்துவமனை கோவிட் வார்டுக்கு தேவையான உபகரணங்களையும் அரசு அலுவலர்களுக்கு ஒரு லட்சம் முகக்கவசங்களையும் வாங்கித்தந்துள்ளேன். 

கோவிட் போராட்டத்தின் அடுத்த கட்டமான இப்பொழுது மேற்கண்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளைச் செய்ய எனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் ஒரு கோடி ரூபாய்தருவதற்கு தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இந்த மனு மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய்க்கும் வழங்கப்பட்டுள்ளது.  

;