ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் பணி தீவிரம்
தஞ்சாவூர், ஜுன் 30- வெண்ணாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன், ஆற்று நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை தேடும் பணி திங்கள்கிழமை 2 ஆம் நாளாக தொடர்ந்தது. தஞ்சாவூர் அருகே, பிள்ளையார்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி துரை. இவர், தற்போது தில்லியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதனால் குடும்பத்தினருடன் தில்லியில் தங்கியுள்ளார். இவரது மகன் சமீர் (17). இவர் தேனியில் ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறைக்காக இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிள்ளையார்பட்டிக்கு வந்தார். பின்னர் நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே, வெண்ணாற்றில் சமீர் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றார். கல்லணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஆறுகளில் தண்ணீரின் வேகம் அதிகம் உள்ளது. இதனால், யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அறிவிப்பையும் மீறி பல பகுதிகளில் சிறுவர்கள், வாலிபர்கள் ஆற்றில் குதித்து விளையாடி குளித்து வருகின்றனர். அந்த வகையில் சமீரும் தன் நண்பர்களுடன் வெண்ணாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு நேரம் குளித்து கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தண்ணீரின் வேகத்தில் சமீர் மற்றும் அவரது நண்பர் ஒருவர் என இருவரும் அடித்து செல்லப்பட்டனர். இதைக் கண்டு அவருடன் வந்த மற்ற நண்பர்கள் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகம் இருந்ததால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் அந்த வழியாக காரில் வந்த பெண் ஒருவர் சமீரின் நண்பரை காப்பாற்றியுள்ளார். ஆனால் சமீர் ஆற்றில் மூழ்கி இழுத்துச் செல்லப்பட்டார். உடனே, இதுகுறித்து காவல்துறைக்கும், தஞ்சாவூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கள்ளப்பெரம்பூர் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ்கமல் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். மேலும், தீயணைப்பு வீரர்களும் வந்து ஆற்றில் இறங்கி சமீரை வெகுநேரம் தேடிப் பார்த்தனர். இதையடுத்து, திங்கள்கிழமை காலை 2 ஆம் நாளாக அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், சமீரை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தனர். களக்குடி, கூடலூர் வரை ஆற்றில் சமீரை தேடும் பணி நடந்தது. இருப்பினும் சமீர் கிடைக்கவில்லை. இதனால் அவரது நிலை என்ன ஆனது என்று தெரியாத நிலையே நீடிக்கிறது.