tamilnadu

img

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாலைப் பணியை துவக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாலைப் பணியை  துவக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை, ஜுன் 30-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள எடுத்துக்கட்டி சாத்தனூர் பகுதியில் சீரமைக்கப்படாத சாலையை உடனடியாக அமைத்துத் தரக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  சுமார் 2 கி.மீ தூரமுள்ள மாதா கோவில் தெரு, மாங்குடி கிராமங்களை இணைக்கும் தார் சாலை, கடந்த பல ஆண்டுகளாக அமைத்துக் கொடுக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது.  இருசக்கர வாகனம் முதல், சாதாரண வாகனங்கள் கூட சென்று வர சிரமப்பட்டு வரும் நிலையில் சாலையை உடனடியாக சீரமைக்கக்கோரி (பொறையார் -மங்கைநல்லூர் சாலை) எடுத்துக்கட்டி சாத்தனூர் சாலையில் நாம் மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன் தலைமையில் ஏராளமானோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பொறையார் காவல் ஆய்வாளர், தரங்கம்பாடி வட்டாட்சியர், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இந்த சாலை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டு மீண்டும் ஊராட்சிக்கு மாற்றப்பட்டதால் காலதாமதம் ஆகியுள்ளது என்றும், இந்த சாலையை செப்பனிட ரூ.76 லட்சத்திற்கு டெண்டர் வைக்கப்பட்டுள்ளதாகவும், 15 தினங்களுக்குள் சாலை அமைக்கும் பணி துவங்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.