இன்று (செப். 17) தந்தை பெரியார் பிறந்த நாள்
1847ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற சமதர்ம காங்கிரசு வேண்டுகோளுக்கிணங்க காரல்மார்க்ஸ் - பிரடரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் வெளியிட்ட சமதர்ம அறிக்கை ( Manifesto of communist party) (1872இல் முதன்முதல் ஜெர்மனியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது)யை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து குடிஅரசில் வெளியிட்ட போது தந்தை பெரியார் எழுதிய முகவுரை.
நன்றி : குடி அரசு - நூல் முகவுரை - 04.10.1931
தற்கால உலகில் ரஷியாவிலும், ஸ்பெயினிலும் மற்றும் சைனா முதலிய இடங்களிலும் சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவைகளின் பேரால் அரசாட்சிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இவ்வுணர்ச்சியானது ரஷியாவில் தான் முதல் முதல் தோன்றியதாக நமது மக்களில் அனேகர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். சமதர்ம உணர்ச்சி சம்பந்தமான சரித்திரத்தைக் கவனித்து ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இக்கருத்து சரியானதல்ல என்பதாகத் தோன்றும். ஏனெனில், உலகில் சமதர்ம உணர்ச்சி என்பதானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியிருப்பதற்கு அத்தாட்சிகளிருக்கின்றன. சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு அதன் தத்துவங்களைப் பற்றியும், கொள்கைகளைப்பற்றியும் வெளியில் எடுத்து மக்களுக்குத் தெரியும்படியாக மகாநாடுகள் மூலமும் அறிக்கை மூலமும் வெளிப்பட்டிருப்பதாக நமக்கு விளங்கும்படியாய் காணப்படும் காலமே இன்றைக்கு சுமார் 80, 90 வருஷங்களுக்கு முன்பு என்று தெரிகின்றது. அதாவது 1847ஆம் வருஷத்திலேயே லண்டன் மாநகரத்தில் உலகத்திலுள்ள சமதர்மவாதிகளுடைய மகாநாடு (காங்கிரஸ்) ஒன்று நடந்திருப்பதாகவும், அதன் பயனாய் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. ஆனால் அதை சீக்கிரத்தில் கையாளப்படவும் அனுபவத்திற் கொண்டு வரவும் முயற்சித்த நாடு ரஷியாவாக ஏற்பட்டு விட்டது. இதுசம்பந்தமாக நமக்குக் கிடைத்த ஒரு அறிக்கை சரித்திரத்தில் சமதர்ம உணர்ச்சி பெற்றவர்களில் முதன்மையான முக்கியஸ்தர்கள் ஜெர்மனியர் களாயிருந்தாலும், அதற்காக மகாநாடு கூடினது லண்டன் பட்டணமாய் இருந்தாலும், அதற்கு அப்பொழுதே கிளர்ச்சி நடந்தது பிரான்சு தேசமாயிருந்தாலும், அது முதல் முதல் அனுபவத்தில் கொண்டுவர முயற்சிக்க வேண்டிய இடம் ரஷியாவாகவே ஏற்பட்டுவிட்டது சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும் அந்தப்படி ஏற்படுவதற்கு நியாயம் இல்லாமலில்லை.
என்ன நியாயமென்று வாசகர்கள் கேட்பார்களேயானால் அதற்கு நமது சமாதானமானது எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்கு தான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறு கொண்டு எழவும் சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். எனவே இந்த நியாயப்படிப் பார்ப்போமானால் உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷிய ஜார் அரசாங்கமே மிக்கக் கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலேயே அங்கு சமதர்மமுறை அனுபவத்திற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று. இந்த நியாயப்படி பார்த்தால் அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியா தேசத்தை விட இந்தியாவுக்கே முதன் முதலாக ஏற்பட்டு இருக்கவேண்டியதாகும். ஆனால் அந்தப்படி ஏற்படாமல் இருப்பதற்கு இங்கு அனேகவித சூட்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும், சூட்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி, அறிவு, உலக ஞானம், சுயமரியாதையுணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் இல்லாமல் காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், அதே சூட்சிக்காரர்கள் அடிக்கடி வேற்றரசர்களை அழைத்து வந்து மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கி ஆளச் செய்து வந்ததாலும் உலகில் சமதர்ம உணர்ச்சி முதன் முதல் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி ரஷியாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.
ஆன போதிலும் கூட இப்போது உலகில் மற்றும் எல்லாப் பாகங்களிலும் ஏற்பட்டு விட்டதின் காரணமாய் இந்தியாவிலும் ஏற்பட வேண்டியது தவிர்க்க முடியாத அவசியமாய் போய்விட்டதால் இங்கும் தலை காட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால் உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால் மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார்-கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால் இங்கு சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை. இவ்விபரங்கள் இந்த அளவில் நிற்க, முன் குறிப்பிட்டதான அதாவது சமதர்மக் கொள்கை சம்பந்தமாக அந்தக்காலத்தில் வெளியான ஒரு அறிக்கையை மக்கள் உணரும்படியாக வெளிப்படுத்தலாம் என்று நாம் கருதுவதால் அதை மொழிபெயர்த்து வெளியிடலாம் என்கின்ற கருத்துக்கு மேல்கண்ட வாக்கியங்களை முகவுரையாக எழுதினோம். இனிமேல் வருபவைகள் முழுவதும் அவ்வறிக்கையின் மொழிபெயர்ப்பேயாகும். அதில் நமதபிப்பிராயம் என்பது சிறிதும் இல்லை. ஆகையால் வாசகர்கள் அதை 1847-ல் இரண்டு ஜெர்மனியர்களுக்கு ஏற்பட்ட அபிப்பிராயம் என்பதாகவே கருதி வாசிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.
- ஈ.வெ.ரா.