tamilnadu

img

அடையாளம் - வல்லம் தாஜூபால்

பொன்னி நதியும் செந்நெல் வயல்களும்
மண்ணின் வளத்திற்கு மகத்தான அடையாளம்

வானுயரும் பெருங்கோயில் தஞ்சையின் அடையாளம்
மீனாட்சித் திருக்கோயில் தென்மதுரை அடையாளம்

மாமல்லைச் சிற்பங்கள் பல்லவரின் அடையாளம்
நாமறிந்த கல்லணையோ கரிகாலன் அடையாளம்

திருபுவனப் பட்டு கைத் திறத்துக்கு அடையாளம்
நிறம்நிறமாய் பூமலர்தல் வசந்தத்தின் அடையாளம்

நாக ரீகத்தோடு நம்முன்னோர் வாழ்ந்ததற்கு – சந்
தேகமே இல்லாமல் கீழடியே அடையாளம்

மூடத் தனஎதிர்ப்பு பெரியார் அடையாளம்
சாதி வெறிஎதிர்ப்பு அம்பேத்கர் அடையாளம்

புத்தர் தவத்துக்குப் போதிமரம் அடையாளம்
சித்தர் பாடல்கள் சீர்திருத்த அடையாளம்

வேதா ரண்யம் உப்புக்கு அடையாளம்
மார்க்ஸும் ஏங்கல்ஸும் நட்புக்கு அடையாளம்

கார்மேக அணிவகுப்பு கனமழையின் அடையாளம்
தேர்தல் அறிவிப்பு பணமழையின் அடையாளம்

குஷ்வந்த் சிங்கிற்கு தலைப்பாகை அடையாளம்
குல்ஜார் பீவிக்கு முக்காடு அடையாளம்

ஊற்று நீர் சுரப்பிற்கு ஆற்றுவளம் அடையாளம்
வேற்றுமையில் ஒற்றுமையேநம் நாட்டிற்கு அடையாளம்

;