tamilnadu

img

வந்த கூட்டம்... கலைந்த வேகம்... நிறம் மாறிய கொடி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க சனிக்கிழமை காலை சென்றனர். மதுரை சாந்திநகர் பேருந்து நிலையத்திலிருந்து வழி நெடுக இருவரையும் வரவேற்பதற்காக மதுரை நகர், புறநகர் பகுதிகளிலிருந்து ஆட்கள் வேன்களில் அழைத்துவரப்பட்டனர். காலை 6.15 மணி முதல் முதல்வரின் காரை எதிர்பார்த்து கூட்டம் காத்திருந்தது. 7.30 மணியளவில் சாந்திநகர் - கூடல்நகரை முதல்வர் வாகனம் கடந்தது. காரில் இருந்தபடியே மக்களை கும்பிட்டபடி முதல்வரும், துணை முதல்வரும் சென்றனர். பின்னர் வந்திருந்தவர்களுக்கு செலவுக்கு பணம் வழங்கினர். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு வாகனத்தில் ஏறிச் சென்றனர்.

முதல்வரை வரவேற்க அழைத்துவரப்பட்ட பெண்களிடம் கொடிகள் வழங்கப்பட்டது. அந்தக் கொடிகள் அதிமுக வர்ணத்திற்கு மாறாக முற்றிலும் பச்சை நிறத்தில் இருந்தது. அதில் முதல்வர், துணை முதல்வர் படங்கள் இடம் பெற்றிருந்தது.முதல்வரிடம் கொடுக்க வைத்திருந்த பூங்கொத்துகளை வழங்கமுடியாத அதிமுக உள்ளூர் தலைவர்கள் சிலர் தங்களது கைகளில் பிடித்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.

அஞ்சல்நகர் இந்தியன் வங்கி முன்பும், கூடல்நகர் செல்லும் வழியில் ஒரு இடத்திலும் சாலையோரத்தில் தேங்கியிருந்த தண்ணீரை டப்பாவில் எடுத்து வாளியில் ஊற்றி தூய்மைக்காவலர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.சாலை விபத்துகளை தடுக்க முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகளை காவல்துறை உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றிவிட்டனர்.அரசு மருத்துவமனை சாலையில் கும்ப மரியாதைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பெண்கள் ஒரே வண்ணத்தில் புத்தாடை உடுத்தி தேங்காய் வைக்கப்பட்ட செம்புகளுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

அரசு மருத்துவமனை நிகழ்வில் பங்கேற்ற வந்த முதல்வரை வரவேற்க முன்களப் பணியாளர்களான செவிலியர்கள் தங்களது பணிகளுக்கு மத்தியில் மருத்துவமனை வாசலில் பலூன்களோடு நீண்ட நேரம்... கால்கடுக்கக் காத்திருந்தனர்.அரசுமருத்துவமனை மருத்துவர்களின் சாதனைகளை அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் மருத்துவமனை முதன்மையர் சங்குமணியோ ஒரு குறிப்பிட்ட நாளேட்டின் செய்தியை பெரிதாக்கி விளம்பரப்படுத்தியிருந்தார்.எந்த அரசு நிகழ்ச்சியிலும் “பாரதமாதா”- படம்போட்டு விளம்பரப்படுத்தப்படுவதில்லை. ஆனால் மதுரை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் “பாரதமாதாவும்” இடம் பெற்றிருந்தார். ஏனோ இந்த மாற்றம்?

சனிக்கிழமையன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டு ரசித்தார்.

நமது நிருபர்
 

;