சொல்லாமல் கொள்ளாமல் ஜெனரல் கம்பார்ட்மெண்ட் ரத்து செய்யப்பட்டதால் செய்வதறியாது கதறி அழுதனர் ஜார்க்கண்ட் தொழிலாளர்கள். கோவை செல்வதற்காக கோவை எக்ஸ்பிரஸான லோகமான்யா எக்ஸ்பிரல் ரயிலிற்காக 26 ஆம் தேதி இரவு 23.10 க்கு ஓசூரில் காத்திருந்தேன். அதற்கு முன் அங்கு தேநீர் விற்பவரிடம் எஸ் 4 கோச் எங்கே நிற்கும் எனக் கேட் டேன். வழக்கமாக நான் அவர்க ளிடம்தான் கேட்டு உறுதிப் படுத்துவேன். அது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். இம்முறை அந்த ஊழியர் சொன்னார், “சார்! ரயில்வேக்கு கிறுக்கு பிடிச்சிருச்சு. எங்கே எது நிக்குமுன்னு சொல்ல முடியல .. தினசரி இஷ்டத்துக்கு மாத்துறானுக … எதுக்கும் செண்ட்ருல நில்லுங்க இங்க அங்க ஓடச் சரியா இருக்கும்...” அவர் சொன்னது சரிதான். அன்றும் ரயில் வழக்கம் போல் தாமதமாக வந்தது. அதுபோல் ஓர் குப்பை ரயிலை நாற்றமெ டுத்த ரயிலை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பயணித்தேன்.வேறு வழி? ஆனால் நான் சொல்லப்போவது இன்னொரு ரயிலின் கதை.
அதற்கு முன் வந்தது தூத்துக் குடி எக்ஸ்பிரஸ். அதுவும் தாமத மாகத்தான் வந்தது. அந்த ரயிலில்தான் குழப்பம் .எந்தெந்த பெட்டி எங்கிருக்கும் என போர்டும் போட்டிருந்தனர் . ஆனால் இடையில் நாலய்ந்து குளிரூட்டிய பெட்டிகள் [ஏசி பெட்டிகள்] முன்னறிவிப்பு இன்றி இணைக்கப்பட்டதால் குழப்பம். இது பரவாயில்லை.பெரும் சோகம் இன்னொன்றுதான். ஜெனரல் கம்பார்ட்மெண்ட் ரயிலின் முன்னால் ஒன்று, பின்னால் ஒன்று இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது . புலம் பெயர்ந்த ஜார்க்கண்ட் தொழிலா ளர்கள் முன் பகுதியில் ரயில்வே போலீசார் வழிகாட்டுதலில் காத்திருந்தனர். மூட்டை முடிச்சு களுடன் குழந்தை குட்டிகளுடன் கணவனும் மனைவியுமாய் முப்பதுக்கும் மேற்பட்டோர். அவர்களுக்கு தமிழோ ஆங்கில மோ தெரியாது. கூட்டி வந்த ஓர் ஏஜெண்ட் தமிழ் பேசுகிறான். வண்டி வந்தது. ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டை காணோம். அந்தத் தொழிலாளர்கள் தட்டுத் தடுமாறினர். முன் பக்கமெல்லாம் ஏசி கோச். மூட்டைமுடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு ,குழந்தை குட்டிகளை இடுக்கிக் கொண்டு பின் பக்கம் ஜெனரல் கம்பார்ட் மெண்ட் இருக்கும் என நம்பி நகர ஆரம்பித்தனர். வண்டி புறப்பட்டுவிட்டது.
செய்வதறியாது கதறி அழு கின்றனர். மறுநாள் சோழவந்தா னில் ஓர் கட்டிட கட்டுமானப் பணி யில் சேர வேண்டுமாம். அங்கே காத்திருந்த நான் உட்பட பயணிகள் அவர்களுக்காக குரல் கொடுக்க ஸ்டேசன் மாஸ்டர் வந்தார். அவரும் புலம்பினார். ஜெனரல் கம்பார்ட்மென்ட் ரத்தானது அவருக்குத் தெரியாது என்றார். அடிக்கடி இப்படி நடப்பதாகச் சொன்னார். “வழக்கமாக பின் பக்கமாக ஜெனரல் கம்பார்ட் மெண்டைத்தான் திடீரென சொல்லாமல் ரத்து செய்வார்கள். ஆகவேதான் போலீசார் இவர்க ளை முன் பக்கமாக இருக்கச் சொன்னார்கள். ஆனால் அந்த கம்பார்ட்மெண்டையும் ரத்து செய்தது தெரியாது. அடுத்து வரும் ரயிலில் சேலம் போய், வண்டி மாறி மாறி செல்லவும்” எனச் சொன்னார். கூடவே இருந்து ஏற்றிவிடவும் செய்தார். மறுநாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பி.ஆர். நட ராஜனிடம் இதனை விவரித்தேன். அவர் கவலையோடு சொன்னார், “தினசரி இப்படி பல நடக்கிறது.ஜெனரல் கம்பார்ட்மெண்டே இருக்கக்கூடாது என்பது மோடி அரசின் முடிவு. எல்லாவற்றையும் ஏசி கோச் ஆக்குவதும் திட்டம். பல லோக்கல் டிரெயின்,பாசஞ்சர் ரயில்கள் சத்தமில்லாமல் சூப்பர் பாஸ்ட் ஆக்கப்படுகின்றன. அனைத்தையும் தனியாரிடம் ஒப்ப டைக்க ஏற்பாடு..” என ரயில்வேயின் மவுனச் சதி குறித்து விவரித்தார்.
சில நாட்களுக்கு முன் பாஜக எம்எல்ஏ கொடுத்த பேட்டி ஒன்றில், “கோவை ரயில் நிலை யத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்...” என்றார். யாரோ குறுக்கே நிற்கிற மாதிரி பழியை மற்றவர் மேல் போட்டார். ஆனால் இவர்கள் உலகத்தரம் எனப் பேசுவது பணக்காரர்களுக் கானது மட்டும்தானோ …ஏழைகளை விரட்டி அடிப்பதுவோ! பெரும்பாலோர் அத்துக்கூலியாய் கூலி உழைப்பாளியாய் இருக்கும் நாட்டில் ரயில் அவர்களை அம்போ என விட்டுவிட்டு புல்லட் வேகத்தில் தனியாரை நுழைக்க வும், மேல்தட்டு பயணிகளை மட்டுமே குஷிப்படுத்தவும் முயல் கிறதோ! அவர்களின் வர்க்கப் பார்வையும் வர்ணப் பார்வையும் வியர்வைக்கு எதிரானதுதானே !
சு.பொ.அகத்தியலிங்கம்