tamilnadu

img

ஊதியம் குறித்த ஐஎல்ஓ அறிக்கை 2022-23 - ஆர்.சிங்காரவேலு

கடந்த நவம்பர் 30 அன்று சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள ஊதிய மாற்றங்கள் குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனா, பண வீக்கம், உக்ரைன் யுத்தம் காரணமாக மக்களின் வாங்கும் சக்தியில், ஊதியங்களில் பல மாற்றங்கள் வந்துள்ளதாக ஐஎல்ஓ கூறுகிறது. பல நாடுகளில் உயர்ந்து வரும் பணவீக்கத் தால் உண்மை ஊதிய வளர்ச்சி எதிர்மறை யாக சென்றுள்ளது .நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் பகுதியினரின் உண்மை ஊதியம் குறைந்துள்ளது. இதை சரி  செய்யக்கூடிய சரியான கொள்கைகள் பின்பற்றப்படாத சூழ்நிலையில், தொழி லாளர்களின் உண்மை ஊதியம் குறையும்; சமத்துவமின்மை உயரும்; பொருளாதார மீட்சி நடைபெறாது; சமூக அமைதியின்மைக்கு இட்டுச் செல்லும். சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2022ல் 3.6% என ஏப்ரலில் மதிப்பிட்ட ஐஎம்எப் ஜூலையில் 3.2% என மாற்றியது. அக்டோபர் மதிப்பீடு 2023-ல் உலக வளர்ச்சி 2-லிருந்து 2.7 சதவீதம் வரை குறையும்; 2023-ல் தொழில் மந்தம் ஏற்படும். 2022 முதல் அரையாண்டில் உண்மை மாத ஊதியம் மைனஸ் 0.9% ஆக குறைந்துள்ளது. 2008க்கு பிறகு முதல் முறையாக உண்மை ஊதியம் எதிர்மறையாக உள்ளது .

சீனாவை நீக்கிவிட்டு பார்த்தால் இது மைனஸ் 1.4 சதவீதமாகும். மற்ற பல நாடுகளை விட சீனாவில் ஊதிய வளர்ச்சி அதிகம். ஜி 20 நாடுகளில் இது மைனஸ் 2.2% ஆகும். கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வடக்கு அமெரிக்க பிராந்தியத்தில் 2020இல் சராசரி உண்மை ஊதியம் திடீரென 4.3 சதவீதம் உயர்ந்தது. ஆனால் 2022 முதல் பாதியில் மைனஸ் 3.2% ஆக வீழ்ச்சியுற்றது. லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பிராந்தியத்தில் 2020ல்  3.3 சதவீதமாக உயர்ந்தும், 2022 முதல் பாதியில் மைனஸ் 1.7 சதவீதமாக எதிர்மறையாகவும் உண்மை ஊதியம் இருந்தது. ஐரோப்பிய யூனியனில் வேலையில்லாக் கால நிவாரணம், ஊதிய மானியங்கள் இருப்பினும், உண்மை ஊதிய வளர்ச்சி 2020இல் 0.4 சதவிகிதம்; 2022 முதல் பாதியில் மைனஸ் 2.4 சதவீதமாக எதிர்மறையாகவும் இருந்தது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 2020இல் ஒரு சதவீதம், 2021ல் 3.5 சதவீதம், 2022-ல் 1.3 சதவீதமாக உண்மை ஊதிய வளர்ச்சி காணப்பட்டது. ஆப்பிரிக்க பிராந்தியத்தில் 2020-இல் மைனஸ் 10.5 சதவீதம், 2021ல் மைனஸ்  1.4 சதவீதம், 2022 மைனஸ் 0.5  சதவீதமாக உண்மை ஊதிய வளர்ச்சி எதிர்மறையாகவே உள்ளது. 2008-க்கும் 2022-க்கும் இடைப்பட்ட 15 ஆண்டுகளில் சோசலிச சீனாவில் உண்மை ஊதியம் 2.6 மடங்கு உயர்ந்தது. 2008-ஐக் காட்டிலும், 2022-ல் உண்மை ஊதியம் இத்தாலி,  ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் கிரேட் பிரிட்டன் வடக்கு அயர்லாந்தில் குறைவாக இருந்தது. அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வு மற்றதை காட்டிலும் உயர்வாக இருப்பதால் குறைந்த வருமானம் பெறுவோர் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 2020-22 காலகட்டத்தில் ஆண்களை காட்டிலும் பெண்கள் கூடுதலாக வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.