tamilnadu

செல்லப் பிராணிகளுக்கு, அக்.15-க்குள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

செல்லப் பிராணிகளுக்கு,  அக்.15-க்குள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூர், அக். 5-   மிஷன் ரேபிஸ் தஞ்சாவூர் திட்டத்தின் கீழ், வெறி நோய் இல்லாத தஞ்சாவூர் குறித்த பணி ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சியில் 19.09.2025 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், இதுவரை 1,100 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு ஊசி பணி மேற்கொள்ளப்பட்ட விபரம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு வளர்ப்பு நாய்களாகும். இதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்டத்தில் உள்ள அனைத்து செல்லப் பிராணிகளுக்கும், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் 15.10.2025 க்குள் வெறிநோய் தடுப்பூசி செலுத்தி அதற்கான தடுப்பூசி பணிவிவர அட்டையை பெற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் சமூக நாய்களுக்கு தினசரி உணவு வழங்கும் சமூக ஆர்வலர்கள் அவற்றிற்கும் தடுப்பூசி பணி மேற்கொள்ள ஏதுவாக தாங்கள் உணவு அளிக்கும் இடம், நாய்களின் எண்ணிக்கை, தினசரி உணவு வழங்கும் நேரம் ஆகிய விவரங்களை மிஷன் ரேபிஸ் ஹாட் லைன் எண் 8110070701 அல்லது 9489129765, 9566416831 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவித்து உதவிட வேண்டும்.  மேலும், டிசம்பர் 2025-க்குள் ரேபிஸ் இல்லா தஞ்சாவூரை உருவாக்கிட, பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகள் அனைத்திற்கும் தடுப்பூசி பணி மேற்கொள்வதுடன், சமூக நாய்களுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள வரும் பணியாளர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பும் நல்கிட வேண்டும்’’ என்றார்.