“சார்... என்னோட பையனுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் பண்ணனும்..”
“ஏன் என்ன ஆச்ச? கூட்டிட்டு வாங்க”
உள்ளே வந்த அப்பாவும், பையனும் துக்க வீட்டிற்குள் நுழைவது போல வந்தனர். உட்காரச் சொன்னேன்.
“சொல்லுங்க. எதுக்காக வந்தீங்க”
“அரசு வேலைக்குப் போகனும்னு, நிறைய எக்சாம எழுதிட்டே இருக்கான்.. எதுவுமே பாஸ் பண்ணல.”
“ஓ... அதனால என்ன.. இன்னும் எழுதட்டும்.”
“ரொம்ப அழுத்தமா உணர்றான், சார்... ஒரு மார்க்லயும், ரெண்டு மார்க்லயும்தான் போயிருது.”
பையன் பக்கம் திரும்பி “உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்..?”
அவன் திடீர்னு நிமிர்ந்தான். “சார்,, கூடைப்பந்து.”
“எந்த பிளேயர ரொம்பப் பிடிக்கும்?”
“கில் சார்.”
அப்பா குறுக்கே புகுந்தார்.. “டேய்.. அவரு கூடைப்பந்துல கேக்குறாரு.. நீ கிரிக்கெட் கில்லப் பத்தி சொல்லிட்டு இருக்கியே.”
“நீ இந்தர்பிர் சிங் கில் பத்திதான சொல்ற.. ஏதோ படைத்தளபதியச் சொல்ற மாதிரி நீங்க எல்லாம் அவர ஜெனரல்னு சொல்வீங்கள்ல.”
அவனது கண்கள் பிரகாசமாகின. நாற்காலியில் நன்றாக அமர்ந்தான். “சினிமா பாப்பியா” என்ற அடுத்த வினாவுக்கு, மீண்டும் அப்பா குறுக்கே வந்தார். “ஒரு ஓடிடி தளமும் விடாம வீட்டுல சந்தா கட்டி வச்ருக்கான் சார்.”
அவர் பக்கம் திரும்பிவிட்டு, அவனை நோக்கி “மகான் படம் பாத்தியா..?”
“பாத்தேன் சார்... விக்ரமும், விக்ரமோட பையனும் நடிச்சுருக்காங்க.”
“விக்ரமோட பையன் பேர் என்ன?”
“துருவ் விக்ரம் சார்.”
“அதக் கேக்கல... படத்துல என்ன பேரு.”
கொஞ்சம் முழித்தவனைப் பார்த்து, “இதுக்கான பதில் நமக்கும் தேவையானது” என்றவுடன், அப்பா கேலியாகச் சிரித்தார்.
ஆனால், தாதாபாய் நவுரோஜி என்றவுடன் “ஆமாம்.. ஆமாம். “ என்று தலையை ஆட்டினான். “இந்தியாவோட முதுபெரும் மனிதர்” என்று தொடங்கி அவரைப் பற்றி இரண்டு நிமிடம் மூச்சு விடாமல் பேசினான்.
அப்பாவால் அவரையே நம்ப முடியவில்லை.
தேர்வர்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். குடும்பம், நட்புகள், உறவுகள் மற்றும் சுற்றியுள்ளோர் மத்தியில் இந்தத் தேர்வுகள் பற்றிய அணுகுமுறை மிகச் சிக்கலானது. மாணவர்களைப் பார்த்தால், “நல்லாப் படிப்பியா, எவ்வளவு மார்க் வாங்குவ... எத்தனாவது ரேங்க்... சொன்ன பிறகு, கடைசில இருந்தா, முதல்ல இருந்தா”னு கேட்டுட்டு நக்கல் சிரிப்பு வேறு சிரிப்பார்கள்..
தேர்வர்களாக இருந்தால், “என்ன கஜினி முகமது” என்று நக்கல் பண்ணுவார்கள். இப்படித்தான் ஒருவர் தேர்வர் ஒருவரைப் பார்த்து, கஜினி முகமது என்று சொல்லியிருக்கிறார். அந்தத் தேர்வர், சொன்னவரைப் பார்த்து, “கஜினி முகமதுனு ஏன் சொல்றீங்க”னு கேட்டிருக்கிறார். உடனே, அவரோ, 17 முறை தோத்தவராச்சேனு சொன்னவுடன, தேர்வர் அவரைப் பரிதாபமாகப் பார்த்திருக்கிறார்.
அவரோ அதைப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து பேச முயன்றிருக்கிறார். தேர்வர் விடவில்லை. “கஜினி முகமது தோக்கவேயில்ல.. ஒவ்வொரு முறையும் இங்க இருக்குற செல்வத்தக் கொள்ளையடிச்சுட்டு தன்னோட நாட்டுக்குப் போனாரு.. முதல்ல வரலாறைத் தெரிஞ்சுக்கங்க” என்றவுடன் அவர் வெளிறிப் போயிருக்கிறார்.
இந்த அழுத்தங்களால்தான் இயல்பைத் தொலைத்துவிட்டு தேர்வர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் பாரக்கும்போது பந்து சிக்சருக்குச் செல்கையில், அது வளைவுப் பாதை இயக்கம் என்று பார்க்க விரும்பும் மாணவன், தான் டிவி பார்ப்பது மற்றவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் பிறர் தலை தெரிகிறதா என்பதில் கவனத்தைச் செலுத்த நேர்கிறது. பீரங்கிக் குண்டும் இப்படித்தான் போகிறது என்று ஆசிரியர் சொன்னபோது, அப்படினா, ஷேர்ஷாவை அந்த குண்டு வளைவுப்பாதைலதான் தூக்கிட்டுப் போயிருக்குமோ என்ற கேட்ட மாணவனை “பாடத்தைக் கவனி” என்று ஆசிரியர் கடிந்து கொண்டார்.
அழுத்தம் என்பது தேர்வால் வருவதல்ல. அதை சமூகம் அணுகும் முறையால் வருகிறது. தல தோனியை இந்திய ஹாக்கி அணியில் இறக்கி விட்டு, பார்றா,, தல சொதப்புறாரு என்று பேசிக் கொண்டிருக்க முடியுமா..? இன்றைய சூழலில் படித்ததற்கேற்ற வேலை இல்லாமல் ஏதாவது ஒன்று, குறிப்பாக பாதுகாப்பான வேலையில் நுழைய வேண்டும் என்று அரசு வேலைகளுக்காகப் பலரும் தயாராகிறார்கள்.
வேலை வாய்ப்புகள் குறைவது, வாய்ப்புகளுக்கு மனுப்போடுவதற்கு ஆகும் செலவு, எங்காவது பயிற்சிக்காகச் செல்லலாம் என்றால் அதற்கான கட்டணம் என்ற பிரச்சனைகள்தான் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த தலைமுறையை விட, தற்போதைய தலைமுறை திறமையில், ஞானத்தில், புத்திசாலித்தனத்தில் அதிகமாகவே ஜொலிக்கிறது.