கணேஷ்
முதலில் “யார் யார் எல்லாம் இன்னிக்கு குளிச்சீங்க” என்று ஆசிரியர் கேட்டபோது, இது என்ன கேள்வி என்று சிலர் கையை உயர்த்தவில்லை. “அட... சீரியசாத்தான் கேக்குறேன்” என்றவுடன் எல்லாரும் கையை உயர்த்தினார்கள். அடுத்து, “யார் யார் எல்லாம் சோப்பு போட்டுக் குளிச்சீங்க” என்றவுடன், வாயைத் திறந்து சிரித்தார்கள். கடைகளில் விற்கும் பிரபலமான இரண்டு “சோப்பு களை” மாணவர்களிடம் ஆசிரியர் கொடுத்தார். வேகமாக அவை சுற்றுக்கு விடப்பட்டது. “உங்களில் கைகளில் என்ன?” என்றவுடன் ஒரே குரலில் “சோப்பு” என்றார்கள். “அதில் அப்படிப் போட்டிருக்கிறதா?” என்றவுடன், கண்கள் அலைந்தன. தேடிப் பார்த்து விட்டு “ஒன்றில் போட்டிருக்கிறது” என்றார்கள். மற்றொன்றில் இல்லை. “உங்கள் வீட்டில் உள்ள “சோப்பில்” போட்டிருக்கிறதா?” என்ற கேள்விக்குப் பதில் வரவில்லை. சோப்பு என்றால், அதில் TOTAL FAT MATTER, அதாவது கொழுப்பு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருக்க வேண்டும். தரவாரியாகப் பிரிக்கவும் செய்திருக்கிறார்கள். 76 விழுக்காடு என்றால் முதல் தரம், 70 விழுக்காடு என்றால் இரண்டாம் தரம் மற்றும் 60 விழுக்காடு என்றால் மூன்றாம் தரமாகும். இது தொடர்பாக ஒரு சம்பவமும் உண்டு. சோப் நிறுவனத்திற்கு எதிராக ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தான் பயன்படுத்துவதில் குறைந்தபட்ச கொழுப்பு கூட இல்லை. அதனால் இது சோப்பே கிடையாது என்று அவர் வாதிட்டார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இனிமேல் சோப் என்று போடக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அதன்பிறகு, சிறிது காலம் குளியல் கட்டி என்று போட்டார்கள். இப்போது அது கூட இல்லை. உங்கள் வீட்டில் எப்படி... சோப்பா அல்லது வெறும் குளியல்கட்டிதானா..??