tamilnadu

img

தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு... தமுஎகச இரங்கல்....

சென்னை:
தமிழறிஞர் இரா.இளங்குமரனார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இலக்கணச் செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை - அதன் பண்பாட்டைத் தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்திடு வதற்காக தனது 94-ஆவது அகவையிலும் தொடர்ந்து பணியாற்றியவர் இளங்குமரனார்.வடமொழி - பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கும் முனைப்புடன், சமஸ்கிருத மந்திரங் களை முற்றிலும் தவிர்த்து, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை திருக்குறள் ஓதியும் - தமிழில் வாழ்த்தியும் நடத்தி வைத்தவர் அய்யா இளங்குமரனார். அடுத்தடுத்த தலை முறைகளிலும் தமிழ் தழைத்திருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

பழந்தமிழர் வாழ்வியல் அடிப்படையில் உடல்நலன் காக்கும் முறைகளையும் அவர் தொடர்ந்து கடைப்பிடித்து, நலவாழ்வு வாழ்ந்து, அவற்றை இன்றைய இளைஞர்களும் பின் பற்றும் வழிமுறைகளைக் கற்றுத் தந்தவர். இளங்குமரனார் அவர்களின் உடை போலவே அவரது உள்ளமும் தூய்மையானது. அயராது அவர் மேற் கொண்ட தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது.அய்யா இளங்குமரனாரின் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர் கள், நண்பர்கள், தமிழ்ச்சான்றோர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் போல என்றென்றும் நிலைத்திருக்கும் அய்யா இளங்குமரனாரின் இறவாப் புகழ்!இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;