tamilnadu

img

கோவிட் தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.... குமரியில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி...

நாகர்கோவில்:
மத்திய அரசு கோவிட் தடுப்பூசியை அரசியலாக்காமல் விஞ்ஞானிகள் கூறும் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றுஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண் டார்.

நாகர்கோவிலில் செவ்வாயன்று (ஜன.5)செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு இரண்டு தடுப்பூசிகளை அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பயன்படுத்த அனுமதிவழங்கப்பட்டுள்ளது. அதை அமல்படுத்திய பிறகு அது எந்த அளவுக்கு திறனுள்ளது என  ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. அந்த முடிவுகளை மத்திய அரசு வெளியிட வேண்டும். பாரத் பயோடெக் தனியார் மருந்து கம்பெனி  கோவாக்சின் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை எப்படிஅமல்படுத்துவது என விஞ்ஞானிகள் ஆலோசனை செய்து வெளிப்படைத்தன்மையுடன் அமல்படுத்தவேண்டும். இதை அரசியலாக்கக் கூடாது. 
கொரோனா வந்தபோது அதை எதிர்கொள்ள மாநில அரசுகள் நிதிதிரட்டமுற்பட்டன. அப்போது மத்திய அரசுதடுத்து நிறுத்தியது. அனுமதி கொடுக்கவில்லை.  ஆனால் மத்திய அரசு பிரதமர் நிவாரண நிதிக்கு பதிலாக பி.எம் கேர் நிதி என்ற பல ஆயிரம் கோடிரூபாய் வசூல் செய்து வைத்துள்ளது. ஆனால் அதிலிருந்து தடுப்பூசிக்கு ஒரு பைசா செலவு செய்ய கூட மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய அரசு நாட்டிலுள்ள 120 கோடி மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும்.

அதற்காக பி.எம் கேர் நிதியிலிருந்து பணத்தை செலவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையில் நடந்த 7 ஆம் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மீண்டும் 8 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லையென்றால் வரும் ஜனவரி 26 ஆம் தேதி தில்லியில் குடியரசு விழாவை மத்திய அரசு நடத்தும்போது, லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ளும் டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். அந்த போராட்டத்தை ஆதரித்து புதனன்று சென்னையில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ளும் காத்திருக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்த கட்சிகள், மாநில அரசுகள் கூட இப்போது எதிர்க்கிறார்கள். தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை ஆதரித்தார்கள். ஆனால் தில்லி சட்டமன்ற கூட்டத்தில் மாநில முதல்வர் அந்த 3 சட்டங்களை எதிர்க்கும் வகையில் சட்ட நகல்களை கிழித்தெறிந்தார். டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நடைபெற்ற அகில இந்தியபந்த் போராட்டத்தை ஒரிசா, தெலுங்கானா, ஆந்திரா மாநில அரசுகள் ஆதரித்தன. கேரளா மாநில அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாஜக அல்லாத எல்லா மாநில அரசுகளும் இந்த சட்டத்தை எதிர்க்கும் நிலையில் அதிமுக அரசு தமிழ்நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை ஆதரித்து பாஜகவின் பிரச்சார பீரங்கி போன்று பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்துவேன் என மாநில முதல்வர் கூறுகிறார்.3 வேளாண் சட்டங்களும் அமலா னால் விவசாய சாகுபடி, வேளாண் விற்பனை பாதிக்கப்படும். விவசாயி களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது. எனவே 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த சட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழக அரசு விவசாயிகளுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கிறது. துரோகத்தை இழைத்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் தனியார் வனபாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கூடாது.  அதை அமல்படுத்துவதற்கு முன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மக்கள்கருத்தறியும் கூட்டத்தை நடத்த வேண்டும். சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களின் கருத்தை அறிவதற்கு முன் அந்ததிட்டத்தை அமல்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி விட்டு சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களின் கருத்தை அறிய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. குமரி மாவட்டத்தில் அரசின் மினிகிளினிக்குகள் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இல்லை என புகார் வந்துள்ளது.  மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியிலும் மினி கிளினிக் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.2012 ஆம் ஆண்டு பூத்துறை கிராமமீனவர்கள் கொச்சிக்கு மீன் பிடிக்க சென்ற போது இத்தாலி கப்பலில் உள்ளவர்கள் சுட்டு 2 பேர் மரணமடைந்தனர். 9 பேர் காயமடைந்தனர். காயமுற்ற 9 மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தமிழகத்தில் சுமூகமாக தேர்தல் நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமித்ஷா வருவதால் ஒரு அரசியல் மாற்றமும் வரப்போவது இல்லை. அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு விவகாரத்தில் அதிமுக - பாஜக இரு கட்சிகளும் ஏதோ நாடகம் நடத்துகிறது.  ரஜினிகாந்த் அரசியலுக்கு வர பாஜக நிர்பந்தம் செய்தது.நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக தற்போது உள்ள சூழ்நிலையில் அரசியல் கட்சி துவங்கினால் அதில் ஏற்படும்தோல்வி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்து அரசியலில் இருந்து ரஜினி பின்வாங்கியதாக தெரிகிறது என அவர் கூறினார்.இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.வி.பெல்லார்மின் ஆகியோர் உடனிருந்தனர்.

;