tamilnadu

img

செப்.27 முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வீர்... விவசாயிகள் இயக்கம் தோன்றிய தென்பரை மண்ணில் ஜி.ராமகிருஷ்ணன் அறைகூவல்....

 மன்னார்குடி:
விவசாயிகள் சங்கங்கள் எதிர்வரும் 27 ஆம்தேதி இந்தியா முழுவதும் முழு அடைப்பு நடத்துவதற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. இந்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டி யது நம் அனைவரின் கடமையாகும் என ஜி.ராம கிருஷ்ணன்  தென்பரையில் அறைகூவல் விடுத்தார். தமிழ்நாட்டில் விவசாயிகள் சங்கம் தோன்றிய தென்பரை மண்ணி்ல் கட்சியின் 23 ஆவது கிளை மாநாடு புதனன்று  நடைபெற்றது. மாநாட்டிற்கு தியாகராஜன், சையது முகம்மது ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து  உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:

பண்ணை அடிமை முறையை ஒழித்துக் கட்டுவதற்காக, விவசாயத்தொழிலாளர்களின் அடிமைத் தளையை அறுத்தெறிவதற்காக, தமிழ்நாட்டில் விவசாயிகள் இயக்கம் முதன் முதலில் தோன்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மண் தென்பரை மண்ணாகும். இந்த மண்ணில்  இம்மாநாடு நடைபெறுகிறது.நமது நாட்டின் தலைநகர் தில்லியில் பத்து மாதகாலமாக விவசாயிகளின் போராட்டம் நடை பெற்று வருகிறது. இந்தியா முன்னெப்போதும் கண்டிராத போராட்டம் இது. இந்திய விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிராக மூன்று வேளாண்விரோதச் சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. இவைகளை அமல்படுத்த வேண்டும் என்று பிடிவாதமாக வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்தியா முழுவதும் என்ன நேரிடும் என்பதை நாம்தான் மக்களுக்கு இயக்கங்கள் மூலம் எடுத்துச் சொல்ல வேண்டும். பாஜக அரசின் இந்த சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் இருப்பார்கள்; விவசாயத் தொழிலாளர்கள் இருப்பார்கள்; ஆனால் விவசாய நிலங்கள் நம்மிடம் இருக்காது. படிப்படியாக  கார்ப்பரேட்டுகள்  கைகளுக்கு போய் விடும். இந்திய விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு விவசாயம் சீரழியும். உற்பத்தி
சரியும். எனவே நாசகரமான இந்தச் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைக்காகத் தான் சுதந்திர இந்தியாவில் வரலாறு காணாத வகையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடுங்குளிரிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் மழையிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இந்த போராட்டத்திற்கு எழுச்சியூட்டும் வகையில் விவசாய சங்கங்கள்எதிர்வரும் 27 ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. இப்படிப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் இயக்கச் சூழலில்தான் இந்த மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தென்பரை மண்ணில் நடைபெறுகிறது.செப்படம்பர் 27 உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்யும். இந்தியாவின் முழுஅடைப்பு போராட்டத்தில் நாம் பங்கேற்க வேண்டும். முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும். இதுதான்  இப்போது நம் அனைவரின் மிக முக்கியக் கடமையாகும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். இதில், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. தமிழ்மணி, ஆர்.குமாரராஜா, ஒன்றியச் செயலாளர் எல்.சண்முகவேலு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.   

முன்னதாக கட்சி கொடியை ராதாநரசிங்க புரத்தில் தென்பரை எல்லை துவக்கத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றினார். அடுத்தாற்போல் இருசக்கர வாகனங்களில் கட்சித் தோழர்கள் அணிவகுத்து வந்தனர். மாநாடு நடைபெறும் அரங்கிற்கு முன்னதாக மாநாட்டுக் கொடியை மூத்த கட்சித் தோழர் ஆவணி ஏற்றிவைத்தார். மாநாட்டில் புதியகிளை செயலாளராக ஜெ.சேகர் தேர்வு செய்யப் பட்டார். 

;