tamilnadu

img

தங்கைக்கு ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க… மனைவிக்கு மருத்துவம் பார்க்க… கடலோடிகளாகச் சென்றவர்களின் கதி என்ன? 11 மீனவர்களின் பரிதவிக்கும் குடும்பங்கள்.....

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தி லிருந்து 11 பேர் சென்றவிசைப்படகுzசிதறுண்ட நிலையில் ஆழ் கடலில் மிதப்பதாக  சக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவல் அறிந்து கதறித் துடிக்கின்றன வள்ளவிளையில் உள்ள மீனவர் குடும்பங்கள்.முதல் முறையாக கடலில் மீன் பிடிக்க புறப்பட்டார் 19 வயதுமார்பின். இவரது தந்தை முத்தப்பன்ஆழ் கடல் மீன் பிடிப்புக்கு செல்லத்துணியாமல் சாதாரண கட்டுமரத்தில் கடலோர மீன்பிடி தொழில்செய்துவந்தவர். உடல்நலம் குன்றிய நிலையில் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிவிட்டார். இவரது மகன் மார்பின் கோவையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் முதலாம்ஆண்டு படித்து வந்தார். மகள்கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி.

தங்கைக்கு ஆன்லைனில் படிக்க ஒரு ஸ்மார்ட்போன் இல்லைஎன்பது பெருங்குறை. கொரோனா முடக்கத்தில் வீட்டில் இருந்த  மார்பின் தங்கைக்கு போன் வாங்கி கொடுக்கும் முடிவுடன் முதல் முறையாக ஆழ்கடல் மீன்பிடிக்க புறப்பட்டார். போன் வாங்கித் தாரேன் என்று போனவன் கதி என்னவென்று அறிய முடியாமல் குடும்பமே துவண்டு கிடக்கிறது.  உயிருக்கு அச்சுறுத்தல் நிறைந்தகடலோடும் தொழில் வேண்டாம் எனக் கருதியே தனது மகனைபொறியியல் படிக்க அனுப்பியதாக உருகுகிறார் முத்தப்பன்.லிபர்தூஸ் - எவிலின்மேரி தம்பதியின் மகன் ஜாண் (20). தந்தை நோய்வாய்ப் பட்டிருக்கும் நிலையில், வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தையும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் சகோதரிகளையும் பாதுகாக்க விசைப்படகில் ஏறி மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டார். குடும்பத்திற்கு ஆதரவாக இருந்த தனது சகோதரனை ஒக்கி புயல் விழுங்கியது. இப்போது மகனின் கதியை அறிந்துகொள்ள முடியவில்லையே என்று தவிக்கிறார் அந்த தாய்.  

ஜோசப்-ஷாலினி தம்பதியின் மகன் ஜெபிஷ் (18). இவர் கோணத்தில் உள்ள நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் மாணவர். செய்முறைத் தேர்வுக்கு பிறகு வீட்டில் இருந்த இவர் வீட்டுக் கடனை அடைக்கவும், குடும்பத்தின் வறுமையை போக்கவும் கடலுக்குச் செல்ல முடிவு செய்து புறப்பட்டுள்ளார். ஆன்லைனில் தேர்வு எழுதிய விடைத்தாளுடன், மகன் இருக்கும் இடம் தெரியாமல் பரிதவிக்கிறது அந்த குடும்பம்.இதயக்கோளாறுக்காக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது மனைவியின் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாத நிலையில் படகில் ஏறியவர் சுரேஷ் (44). மாதம் தோறும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம்வரை மருந்துக்காக தேவைப்படு கிறது. தற்போது மருந்து இல்லாதநிலையில் கணவரின் வருகைக்காககாத்திருக்கிறார்.  கடலுக்குச் சென்றால்தான் உணவு என்கிற நிலையில் குடும்பத்தின் பட்டினி போக்க படகில் ஏறியவர் ப்ரெடி (42). 5ஆம் வகுப்பில் படிக்கும் மகனையும், 4 ஆம் வகுப்பில் படிக்கும் மகளையும் எப்படி காப்பாற்றுவது என்கிறகேள்வியுடன் அவரது வருகைக்காக காத்திருக்கிறார் ப்ரெடியின் மனைவி.

குமரி மாவட்டம் வள்ளவிளை யைச் சேர்ந்த படகு உரிமையாளர் ஜோசப்  பிராங்க்ளின் (47) சுமார் ரூ.50 லட்சம் வரை கடன்பட்டு வாங்கியதுதான் மெர்சிடெஸ் என்கிற விசைப்படகு. கடனில் ஒரு பகுதியை கட்டி முடித்துள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எந்த கப்பல் மோதியது. கணவர் என்ன ஆனார் என்பதையெல்லாம் அறிய முடியாத நிலையில் பேசவும் திராணியற்றுக் கிடக்கிறார் அவரது மனைவி.  

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்

கவிஞர் வாலியின் இந்த பாடல் வரிகளை விஞ்சும் வகையில் கண்ணீர் கடலில் தத்தளிக்கின்றன மீனவர் குடும்பங்கள்.  

தேர்தல் முடிவுக்காகவும், கொரோனா பெருந்தொற்றிலும் முடங்கி கிடக்கிறது தமிழகம். எதிர்காலமே கேள்விக்குறியாகி வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன மீனவர் குடும்பங்கள். தமிழகஅரசும் மத்திய அரசும் உடனடியாகஉதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

                                 **************** 

படக்குறிப்பு : காணாமல் போன 11 நபர்களின் வள்ளவிளையில் உள்ள வீடுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், கொல்லங்கோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.விஜயமோகனன், சிபிஎம் கொல்லங்கோடு வட்டாரச் செயலாளர் டி.எஸ்.அஜித் குமார், வட்டாரக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எல்.கிளீட்டஸ், டி.சேவியர், எஸ்.மேரிதாசன், மீன்பிடி சங்க செயலாளர் ஏ.பிராங்கிளின், ஏ.கிளைமண்ட் ஆகியோர் சென்று ஆறுதல் கூறினர். வள்ளவிளை பங்கு தந்தை ரிச்சர்டை சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தனர். காணாமல் போன அனைத்து மீனவர்களையும் மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

;