tamilnadu

கொதிநிலை

 

அலுவலகத்தில் ஓர் அதிகாரி
ஃபைல்களை எல்லாம்
பெண்டிங்கில் வைப்பார்
பெண்டிங் பிரபு ஆவதற்கு
பயிற்சி எடுக்கிறீரா
எனக் கேட்டோம்
இல்லை ஆளுநர் ஆவதற்கு
பயிற்சி எடுக்கிறேன் என்றார்
இரண்டும் ஒன்றுதான்...
ஆளுநர்தான் பெண்டிங் பிரபு

கேஸால் அடுப்பு எரியும் - விலை கேட்டாலோ வயிறெரியும்
பெட்ரோல் கிடைப்பது மண்ணில் - அதன்
விலையோ பறக்குது விண்ணில்
மிகவும் உயர்ந்தது பட்டேல் சிலை
அதைவிட உயர்ந்தது டீசல் விலை

பாம்புக்குக் கால்கள் இல்லை
மீனுக்கு இரைப்பை இல்லை
நண்டுக்குக் கழுத்து இல்லை
நத்தைக்கு ரோமம் இல்லை
முதலைக்கு நாக்கு இல்லை
ஒன்றிய அரசுக்கோ
உள்ளத்தில் ஈரம் இல்லை

அவர்களுக்குத் தெரியவில்லை
லகர ழகர வேறுபாடு
நாம் கேட்பது நல்ல வழி
அவர்கள் கொடுப்பதோ நல்ல வலி

குறிப்பிட்ட கொதிநிலையில்
பொங்கும் பால்
எந்தக் கொதிநிலைக்கும்
பொங்காதவன் பாழ்

- வல்லம் தாஜுபால் 
 

;