வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த ராதா என்பவர் இடமாறுதல் கோரிக்கை ரத்தானது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறுகையில், அரசு துறையில் பணி செய்யும் மற்ற பணியாளர்களுடன் ஒப்பிடும்போது ஆசிரியர்களுக்கான வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது. இதனால் ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது போன்ற பகுதிநேர வேலை செய்து வருகின்றனர். இது ஆசிரியர்களிடையே பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையை அதிகரிப்பதாக உள்ளது.
தற்போதுள்ள கல்வித்துறையின் நிலைமை சிறந்த செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. மேலும் கல்வித்துறையில் இருக்கும் முறைகேடுகள், முரண்பாடுகள் உற்று நோக்கப்பட வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாக கூட அரசு பள்ளிகளை உருவாக்க முடியாத நிலையே உள்ளது.
அதனைதொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான முறைகேடுகள், புகார்கள், தொடர்பாக புகார் அளிக்க தொலைப்பேசி எண், அலைபேசி எண், வாட்ஸ்அப் எண்ணை உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும். அவர்கள் தனியாக டியூசன் நடத்துவது போன்ற புகார் ஆவணங்களை சேகரித்து, மாவட்டம் தோறும் குழுவை ஏற்படுத்தி துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.